புதுக்கோட்டை டேங்கில் மாட்டு சாணம்? இது அது இல்ல..திடீர் ட்விஸ்ட் கொடுத்த அதிகாரிகள்! பறந்த நோட்டீஸ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது இது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். மேலும் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டு சாணமா அல்லது நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் உருவான பாசியா என விசாரித்து வருவதாக அதிகாரிகள் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டு சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறும் அப்பகுதி மக்கள் இதன் காரணமாக ஏராளமானோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
குடிநீர் தொட்டியில் சாணம்: குறிப்பிட்ட குடிநீர் தொட்டியிலிருந்து வினியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர்கள் கூறினர். வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது அதுவும் புதுக்கோட்டையிலேயே நிகழ்ந்தது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மக்கள் புகார்: தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திமுக அரசு பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு கண்டனங்களை பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
அதிகாரிகள் விளக்கம்: மேலும் பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக புதிய விளக்கம் ஒன்றை அதிகாரிகள் அளித்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணத்தை கலந்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நேரத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படவில்லை.. மாற்று சமூகத்தை சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாணமா? பாசியா?: எனவே பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என்பதை ஏற்க முடியாது எனினும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் அந்த குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒருவேளை தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். ஆய்வு முடிவு வந்தபின் அந்த தண்ணீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டுள்ளதா அல்லது அந்த தண்ணீர் தொட்டியை பல நாட்களாக சுத்தம் செய்யாததால் ஏற்பட்டுள்ள பாசியா என்பது தெரியவரும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
நோட்டீஸ்: அதே நேரத்தில் தொட்டியை ஏன் சுத்தம் செய்யவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்தப் பகுதி குடிநீர் ஆபரேட்டர் உள்ளிட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தொட்டியில் அனைத்து பகுதிகளும் சுத்தமாக இருக்கும் நிலையில் ஒரு இடம் மட்டும் அசுத்தமாக இருக்கிறது. எனவே இது பாசியாக இருக்க வாய்ப்பு இல்லை. யாரோ ஒருவர் மாட்டு சாணத்தை கலந்திருக்கும் நிலையில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் இதுபோன்ற திசை திருப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications