ஓபிஎஸ் சபரீசன் ‘ஃப்ரெண்ட்லி’ மீட்டிங்.. எடப்பாடி - திமுக தான் ரகசிய கூட்டு! தினகரன் சொல்றதை பாருங்க!
புதுக்கோட்டை : ஓ.பன்னீர் செல்வம் - சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு எனத் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் வந்துள்ளது எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியை காணச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலர் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு பற்றி : ஓபிஎஸ், சபரீசன் சந்திப்பு, திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டு சேர்ந்திருப்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்நிலையில் இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன்.
அதிமுக பிரச்சனை : நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அப்போது அமமுகவின் நிலைப்பாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பருக்குள் அமமுக நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும். அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது. மக்கள் தான் சரியான அறிவுரையை கொடுக்கவேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர். அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது. அந்தப் பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்டு திமுகவின் தீய ஆட்சியை விரட்டி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்.

எடப்பாடி திமுக ரகசிய கூட்டணி : திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நத்தையை விட குறைந்த வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் வந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக ஃபைல்ஸ் விவகாரம் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் பை லாவையே மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கியுள்ளார். கூவத்தூரில் யாரையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லை.

நிச்சயம் சந்திப்பேன் : எம்எல்ஏக்கள் எல்லாம் ஒன்று கூடி நாங்கள் ஒன்றாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் இடமாக கூவத்தூர் இருந்தது. தவிர அங்கே யாரையும் விலை கொடுத்து நாங்கள் வாங்கவில்லை. இது பொய் பிரச்சாரம். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு பதவி போன பின்பு அதனை பயன்படுத்தி செலவு செய்து கட்சியை அபகரித்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்திக்க வந்தால் அவரை நான் கண்டிப்பாக சந்திப்பேன். அவரும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர் தான். கடந்த கால தவறுகளை உணர்ந்து தற்போது துரோகத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications