ராமநாதபுரத்தில் அதிமுக பூத் ஏஜெண்டை சட்டையை கிழித்து சரமாரி தாக்குதல்... உயிருக்கு பயந்து ஓட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஒரு கிராமத்தில் பூத் ஸ்லீப் மட்டும் வைத்துக் கொண்டு வாக்களிக்க போன இளம் பெண், அசல் ஆவணத்தை எடுத்து வராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதை தட்டிக்கேட்ட அதிமுக பூத் ஏஜெண்டை அந்த பெண்ணின் உறவினர்கள் கடுமையாக தாக்கினார்களாம்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடனை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது ராமநாதபுரம் லோக்சபா தொகுதி. இந்த தொகுதியில் எப்போதுமே அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு திமுக சார்பில் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா ஜெயபால் போட்டியிடுகிறார். இதுதவிர சுயேட்சைகளும் போட்டியிடுகிறார்கள்.. ஓ பன்னீர்செல்வம் பெயரிலேயே 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

ராமநாதபுரம் தொகுதியில் இன்று காலை முதல் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்.. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. அதேநேரம் பரமக்குடி அருகே அதிமுக பூத் ஏஜெண்ட் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. எதனால் இந்த சம்பவம் நடந்தது என்பதை பார்ப்போம்,.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் வாக்குச்சாவடி மையம் இருக்கிறது. இங்கு பால மாலதி என்ற பெண் இன்று மதியம் 12 மணியளவில் வாக்குச்சாவடிக்கு வந்தார்.. அங்கு தேர்தல் அதிகாரிகளுடன் பூத் ஸ்லிப் மட்டுமே வைத்துக்கொண்டு அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அனுமதிக்க மறுக்கவே, தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் முகவர்களிடம் பெண் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

அப்போது வணங்கானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பூத் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த முரளி மகன் ராமு ஏன் அசல் ஆவணம் கொண்டு வரவில்லை என பால மாலாவிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதை தொடர்ந்து அந்த பெண் வெளியே சென்றுவிட்டார். தன்னிடம் வாக்குவாதத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட் ஈடுபட்டதாக அந்த பெண் உறவினர்களிடம் கூறினாராம்.
இதனிடையே உணவருந்துவதற்காக வெளியே வந்த ராமுவை மஞ்சூர் இளைஞர்கள் பத்துக்கு மேற்பட்டோர் தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தோடு வீட்டில் தஞ்சம் அடைந்தார். இந்த விவாகரத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோளும் விடுத்துள்ளார் . அவர் கிழிந்த சட்டையுடன் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications