எடப்பாடியெல்லாம் ஒரு தலைவரா? மேடையில் பேசிய கருணாஸிடம் சண்டைக்கு போன தொண்டர்! ஷாக்கில் திமுக
ராமநாதபுரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் ஒரு தலைவரா? என மேடையில் கேள்வி கேட்டு விமர்சனம் செய்த நடிகர் கருணாஸிடம் தொண்டர் ஒருவர் கேள்வி கேட்டு சண்டைக்கு போன சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரும் 19 ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியாக மாற வேண்டி உள்ளது என அவர் தெரிவித்து இருந்தார்.

திமுக கூட்டணியில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி மீண்டும் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்த மீண்டும் நவாஸ் கனி எம்பி தேர்தலில் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் சார்பில் சந்திரபிரபா, பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தான் ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளரான நவாஸ் கனியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதுதொடர்பான நிகழ்ச்சியில் மேடையில் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, ‛‛எடப்பாடி ஒரு தலைவரா? தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருக்கும் வகை யாரும் வந்தார்களா? ஜெயலலிதா இருந்தபோது மோடியா? லேடியா? என்று கேட்டார்கள். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவுக்கு இருந்த தைரியம், ஆளுமை அதன் பிறகு வந்த எடப்பாடி பிழனிச்சாமிக்கு இருக்கிறதா? எடப்பாடி ஒரு தலைவராக அவரு. நான் எல்லாம் ஓட்டுப்போட்டு தானே உன்னை முதலமைச்சர் ஆக்கினேன். அப்படித்தோனே வந்தீர்கள். என்னென்ன சொன்னீர்கள். என்னென்ன செய்தீர்கள்.
10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் கேட்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. இதுதொடர்பாக சட்டசபையில் குரல் கொடுத்தவன் நான். உச்சநீதிமன்றத்தில் சொந்த காசில் வழக்கு நடத்தியவன் நான். அது மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதற்காக அல்ல. எல்லோரும் நல்லா இருக்கணும். நாங்களும் நல்லா இருக்கணும் என நினைத்தேன். அது தவறா? அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் அதை செய்யவில்லை.
அப்போது 7 , 8 அமைச்சர்கள் (முக்குலத்தோர்)இருந்தார்களே. அப்போது துணை முதல்வராக கூட ஓ பன்னீர் செல்வம் இருந்தார். கருணாசை உள்ளே வைக்கிறார்கள். மணிகண்டனை பதவியில் (முன்னாள் அமைச்சரும், மாஜி ராமநாதபுரம் எம்எல்ஏ) இருந்து தூக்குற. முக்குலத்தோர் என்றால் இளக்காரமாக இருக்கிறதா? என்று கேட்க வேண்டுமா இல்லையா. ஒரெயொரு அமைச்சராக இருந்த சிவி சண்முகம் ராமசாமி படையாச்சியார் படத்தை சட்டசபையில் திறக்கிறார். ஒரு நாளில் 10.5 இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்கள். அவருக்கு இருக்கும் சமுதாய பற்று ஏன் உங்களிடம் இல்லை. இதை யார் தான் கேட்பது?'' என பேசி கொண்டிருந்தார்.
இந்ந வேளையில் ஒருவர் மேடையின் முன்பு வந்து கருணாசை பார்த்து‛‛ஒரு நிமிடம்... சின்ன தகவல். கூவத்தூரில் நீங்கள் எடப்பாடிக்கு ஓட்டுப்போட்டீர்களா'' என கேள்வி கேட்டார். அதற்கு கருணாஸ் ‛‛ஆமா'' என்று பதிலளித்தார். அதன்பிறகு அந்த நபர், .‛‛அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைவராக தெரிந்தாரா?'' என கேள்வி எழுப்பினார். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேடையில் கருப்பு சிவப்பு துண்டு அணிந்திருந்தவர்கள் கேள்வி எழுப்பியவரை அங்கிருந்து செல்லும்படி கூறினார்கள்.
இதற்கிடையே வாக்குவாதம் முற்றவே போலீசார் அங்கு வந்தனர். போலீசாரும், அங்கிருந்தவர்களும் கேள்வி கேட்ட நபரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த வேளையில் கருணாஸ் தனது ஆதரவாளர்களிடம், ‛டேய் அவரை மேலே கூட்டிட்டு வாடா.. முதலில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன்'' எனக்கூறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications