தேவர் ஜெயந்தி.. அக்.30ல் பசும்பொன் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. தெற்கில் குவியும் அரசியல் தலைவர்கள்
ராமநாதபுரம்: பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வருகிற 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் இந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது.
பொதுவாக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன. தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து 29ஆம் தேதி விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், 30ஆம் தேதி காலையில் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார். மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதல்வர், அங்கு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக திமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சென்று அஞ்சலி செலுத்துவதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அவரே நேரில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு அவரால் செல்ல இயலாத சூழ்நிலையில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் பங்கேற்க இருக்கிறார். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவர் குருபூஜை விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்றும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது, பேருந்துகளில் அமர்ந்து அமைதியாக பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications