நம்பர் 22! வரிசையாக அடுத்தடுத்து இருந்த ஓ பன்னீர்செல்வம்! ஓபிஎஸ்ஸுக்கு ராமநாதபுரத்தில் பெரிய சிக்கல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சின்னம் மற்ற ஓ பன்னீர்செல்வத்துடன் கலந்து வாக்கு பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் அங்கே போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் ஓ பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
'ஓ'வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வங்களின் அப்பாக்களின் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவர் ஆகும். இவர்களுக்கு விரைவில் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படலாம்.
5 பேர் சின்னம்: இப்படி 5 பேர் ஒரே பெயரில் மனு தாக்கல் செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நடந்துள்ளது. ஏற்கனவே இப்படி பல முறை நடந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் மூத்த அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து 6 ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுதான் அதிக நபர்கள் ஒரே பெயரில் போட்டியிட்ட தொகுதி ஆகும்.
அதற்கு அடுத்து ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 5 ஓ பிஎஸ் போட்டியிடுவது இரண்டாவது பெரிய சாதனை ஆகும்.
இது போல நடப்பது தற்செயல் நிகழ்வு அல்ல, இது கவனமாக கட்டமைக்கப்பட்ட அரசியல் திட்டமிடல் மூலம் நடப்பது ஆகும். உதாரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனின் தோல்விக்கு பெயர் குழப்பம் முக்கிய காரணம். அவரின் பெயரை கொண்ட டி.திருமாவளவன், சுயேட்சையாக 289 வாக்குகள் பெற்றார். இதுவும் கூட திருமா தோல்வி அடைய காரணம் ஆகும்.அதே போன்ற சவால் தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டு உள்ளது.
சின்னம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலா பழ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு ஓ பிஎஸ்சுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரே மாதிரி இரண்டு சின்னமும் இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்படலாம். மற்றவர்களுக்கு வாளி, டம்ளர் மற்றும் புளி சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளது.
வரிசையில் எங்கே உள்ளது: ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சின்னம் மற்ற ஓ பன்னீர்செல்வத்துடன் கலந்து வாக்கு பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 22வது பெயராக ஓ பன்னீர்செல்வம் பெயர் உள்ளது.
அவருக்கு மேல் 19, 20, 21ல் மூன்று ஓ பன்னீர்செல்வம் உள்ளனர். அவருக்கு கீழ் 23 ல் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் உள்ளார். இவர்கள் இடையே வேறுபாட்டை காட்ட அப்பா பெயரும் கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications