மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டம்... காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரியில் தமிழகம் வர உள்ளதாகவும் அப்போது ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை அவர் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பாம்பன் கடலின் நடுவே உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தின் அருகிலேயே ரூ.550 கோடியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இதற்காக பாம்பன் கடலில் கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மண்டபத்தில் இருந்து மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் அமையும் இடம் வரையிலும் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கப்படடிருக்கிறது. அதன் மீது தண்டவாளம் பொருத்தும் பணிகளும், பாலத்தின் ஓரங்கள் முழுவதும் மேற்பட்ட மின் கம்பங்கள் பொருத்தும் பணியும் தற்போது முடிவடைந்துள்ளன.
கடந்த நான்கு மாதங்களாக பாலத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து வடிவமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக விரைவில் தூக்குப்பாலத்தை நகர்த்தி மையப்பகுதிக்கு கொண்டு வந்து பொருத்த உள்ளார்கள். அப்படி பொருத்திவிட்டால் பாலப்பணிகள் முடிந்துவிடும். இந்நிலையில் இந்த பணி விரைவில் நடக்க போகிறது.
இதுகுறித்து பாம்பன் பாலத்தில் ரயில் பாலம் கட்டி வரும் ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. தூக்குப்பாலத்தின் பணி நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் நகரும் கேன்ட்ரி மூலம் தூக்குப்பாலத்தை நகர்த்தி மையப்பகுதிக்கு கொண்டு வந்து பொருத்த போகிறது இந்த தூக்குப்பாலத்தின் நீளம் 77 மீட்டராகும். எடை 600 டன், உயரம் சுமார் 5 மீட்டர் இருக்கும்.
இதனை இயக்குவதற்கும், கடலுக்குள் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் வைப்பதற்கும் ஆப்ரேட்டர் அறை ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது" என்றார்.
இதனிடையே பாஜகவைச் சேர்ந்த முரளிதரன் கூறுகையில், "பிரதமர் மோடி பிப்ரவரியில் தமிழகம் வருவதாகவும், அப்போது பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை அவர் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் எங்களுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்" என்றார்.












Click it and Unblock the Notifications