தொடங்கியது அடுத்த அலை? எல்லா அறிகுறிகளும் அதையே காட்டுகிறது.. உயரும் பாதிப்பால் மிரளும் சிங்கப்பூர்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் கடந்த சில மணி நேரமாக வைரஸ் பாதிப்பு திடீரென மளமளவென அதிகரித்ததால், அங்குத் தினசரி பாதிப்பு முதல்முறையாக 5000ஐ கடந்துள்ளது,
கொரோனா வைரஸ் - கடந்த 2 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது இந்த ஒற்றை வைரஸ் தான். அனைத்து நாடுகளையும் இது ஒரு வழி செய்துவிட்டது என்றே சொல்லலாம்.
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் தொடங்கி பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கத் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் இதில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் முதல் அலை ஏற்பட்டது. அதன் பிறகு சில காலம் வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் கூட அடுத்தடுத்து தோன்றிய ஆல்பா, டெல்லா உருமாறிய கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இதனால் கொரோனாவை எந்த நாட்டினாலும் இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

சிங்கப்பூர் கொரோனா பாதிப்பு
அதேநேரம் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவை மூலம் சில நாடுகள் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகின்றன. அப்படி தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடான சிங்கப்பூர் கொரோனா பாதிப்பைப் பல காலமாகத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்தது. முதலில் தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த அந்நாட்டு அரசு, அதன் பிறகு பைசர் வேக்சினை கொண்டு தடுப்பூசி பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
Recommended Video

அதிகரிக்கும் கொரோனா
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த சில நாட்களாகவே அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அங்கு மொத்தம் 5324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 4,651 பேருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குமிடங்களில் 661 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 66 பேருக்கு ஐசியு-இல் வைத்து தீவிர சிக்சசை அளிக்கப்படுவதாகவும், மீதமுள்ள 76 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் முதல்முறை
சிங்கப்பூர் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 5000ஐ தாண்டுவது இதுவே முதல்முறையாகும். வெறும் சில மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தளர்வுகள் எப்போது
வெளிநாடுகளில் இருந்து வருவோர் ஏற்கனவே வேக்சின் போட்டுக் கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் அரசு மெல்லத் தளர்த்தி வருகிறது. அதேநேரம் உள்ளூரில் மக்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முடியும் எனச் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஐசியு படுக்கைகள்
சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஐசியு படுக்கைகளில் மொத்தம் 79.8% இடங்கள் நிரம்பியுள்ளன. இது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் அதைச் சமாளிக்கும் வகையில் கூடுதலாக 100 ஐசியு படுக்கைகள் அடுத்த வாரம் தயாராகிவிடும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நேற்றைய தினம் மொத்தம் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற 9 பேரும் வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications