சிங்கப்பூர் மக்களுக்கு ஸ்டாலின் ‘ஸ்வீட்’ நியூஸ்.. லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம்!
சிங்கப்பூர் : சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும், சிங்கப்பூரின் சிற்பியுமான லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னமும், அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரு நாடுகளுடனான தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இன்று சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
பின்னர், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, இன்று மாலை, சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை, தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ ஒருபோதும் பிளவுப்படுத்துவிட முடியாது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது திராவிட இயக்கம்தான்; திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன் .

தமிழர்களின் மற்றொரு தாய்நாடாக சிங்கப்பூர் இருக்க காரணமாக இருந்தவர் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. சிங்கப்பூரை மிகக்குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றியவர் லீ க்வான் யூ. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்துள்ளோம். மன்னார்குடியில் லீ குவான் யூ பெயரில் நூலகம் அமைக்கப்படும்.
சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு தி.மு.க அரசு கலங்கரை விளக்கமாக உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தமிழர்கள் அதிகம் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications