கீழடியில் தோண்டத் தோண்ட ஆச்சர்யம்.. தங்க அணிகலன், கண் மை தீட்டும் குச்சி உள்பட 183 அரிய பொருட்கள்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9ஆம் கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம், கண் மை தீட்டும் அழகு சாதன குச்சி, செப்பு கம்பி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை பொறுப்பு ஆணையர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளின்போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரப்பூர்வமான முடிவுகளை பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததையும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலம் கொண்டது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 9ஆம் கட்ட அகழாய்வில், 9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சுடுமண் பொம்மை, கண் மை தீட்டும் குச்சி, செம்பு கம்பி, தங்க அணிகலன், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை ஆயுதம் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் கீழடியில் அமைக்கப்பட்ட 4 அகழாய்வு குழிகளில் 35 செ.மீ ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட ஒழுங்கற்ற தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ முதல் 6 செ.மீ தடிமனுடன் காணப்படுகிறது. மேலும், வட்டச் சில்லுகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கு உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளன.
கீழடி அகழாய்வில் தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலான தொல்பொருட்கள் கிடைத்து வருவது, ஆய்வாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அருங்காட்சியகம் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications