மானாமதுரை அருகே பகீர் சம்பவம்.. இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்!
சிவகங்கை: மானாமதுரை அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையை தொடர்ந்து 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர்.

இதனையடுத்து பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த போதை கும்பல், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 5 பேரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது அடிபட்ட காயம் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னை தாக்கிவிட்டு தன்னுடன் பேசிக்கொண்டிருந்த தோழியை 5 பேர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் புகாரை பெற்றுள்ளனர். அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications