அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில் கிடக்கே.. கதறிய "ரமா".. அவலம்
சிவகங்கை: பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.
அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும்.
நடைபயணம்: பொதுவாக அரசியல்வாதிகளின் நடைப்பயணம் என்றாலே, காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி... காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர்.
பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகிறாராம். 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். மாலை மீண்டும் கொஞ்ச நேரம் நடக்கிறார் என்று கூறப்படுகிறது.
புகார்: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் தான் அளித்த மனு சாலையில் வீசி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் பார்த்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுதான் சாலையில் கிடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications