504 கிடாய்கள்.. ஊரே திரண்டு சீர்வரிசை.. ஊர் ஊருக்கு வண்டி.. மிரட்டிவிட்ட அதிமுக மாவட்ட சேர்மன்!
சிவகங்கை : அதிமுகவைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன். மணி பாஸ்கரனின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று அவரது சொந்த ஊர் அருகே நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊரே திரண்டு சீர் வரிசையோடு, 504 கிடாய்களை கொண்டு வந்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்துள்ளார் அதிமுக மாவட்ட சேர்மன்.
சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குன்னத்தூரில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு விழாவுக்கு, பொன்.மணி பாஸ்கரனின் சொந்த ஊரான பொன்னடப்பட்டி கிராம மக்கள் மட்டுமல்லாது, மாவட்டம் முழுக்க இருக்கும் அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
அதிமுகவினரை அழைத்து வர வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட சேர்மன்
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருப்பவர் பொன். மணி பாஸ்கரன். இவர் சிங்கம்புணரி எஸ்.புதூர் அருகே உள்ள பொன்னடப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் தொழிலதிபராக இருந்து வரும் இவர் கடந்த 2019ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சில் 1வது வார்டில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் மாவட்ட சேர்மன் பதவியையும் பெற்றார். அதிமுகவில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கொரோனா காலத்தில்
2019ல் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் பொன். மணி பாஸ்கரன். மேலும் தனது சொந்த ஊரான பொன்னடப்பட்டி கிராம மக்களுக்கு பல நாட்களுக்குத் தேவையான சமையல் பொருட்களை வழங்கி இருந்தார். இதனால், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

வரவேற்பு நிகழ்ச்சி
இந்நிலையில், பொன்.மணி பாஸ்கரனின் மகள் திருமணம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், தனது சொந்த ஊரான பொன்னடப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் இன்று வரவேற்பு விருந்து நடத்தியுள்ளார். இதில் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஊரிலும்
இந்த திருமண வரவேற்பு நிகழ்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தார் பொன்.மணி பாஸ்கரன். மேலும், அதிமுக தொண்டர்கள், வரவேற்பு விருந்துக்கு வருவதற்கான வாகன ஏற்பாடுகளையும் அவரே செய்து இருந்தார். இதற்காக ஒவ்வொரு ஊருக்கும் அதிமுக கிளை செயலாளர்களிடம் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

504 கிடா
மேலும், இந்த வரவேற்பு விருந்துக்காக நேற்று மாலை பொன்னடப்பட்டியில் இருந்து 505 ஆட்டுக் கிடாய்கள், ஆளுயர குத்து விளக்குகள், சேலை, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் என ஊர் மக்கள் தப்புத் தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து சீர் வரிசை கொண்டு வந்தனர். அதிமுக மாவட்ட சேர்மன் தனது மகள் திருமண வரவேற்பை பிரமாண்டமான முறையில் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களை வாய்பிளக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications