மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி குழப்பம், சந்தேகமா? “ஹெல்ப்லைன்” எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
சிவகங்கை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, அரசு அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் உதவி மைய எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அதன்படி விண்ணப்ப முகாம்கள், மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி நேற்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை, அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினமே பலருக்கும் ரூ.1000 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் வகையிலான வங்கி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட கையேடுகள் வழங்கப்பட்டன.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்த மூன்று மாத அவகாசத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் முடிவு நிலை என்னவாயிற்று? விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் பெற விரும்பும் பொதுமக்கள், கொடுக்கப்பட்டுள்ள உதவி மைய எண்களுக்கு அழைத்து பேசலாம் என அறிவித்துள்ளார் சிவகங்கை மாவடட் ஆட்சியர் ஆஷா அஜித்.
*சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம்- 7845145001,
*சிவகங்கை கோட்டாட்சியர்- 7845738002,
*தேவகோட்டை கோட்டாட்சியர் - 7845014004,
*சிவகங்கை தாசில்தார்- 8438856008,
*மானாமதுரை தாசில்தார்- 8925786003,
*காளையார் கோவில் தாசில்தார்- 8438957006,
*திருப்புவனம் தாசில்தார் - 8925664001,
*இளையான்குடி தாசில்தார்- 9042317001,
*திருப்புத்தூர் தாசில்தார்- 8925078921,
*காரைக்குடி தாசில்தார்- 8807378005,
*தேவகோட்டை தாசில்தார்- 8870362101,
*சிங்கம்புணரி தாசில்தார் - 8122576001
மேற்காண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications