உறுதியா சொல்றேன்.. காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு தரமாட்டாங்க.. கார்த்தி சிதம்பரம் சொன்ன காரணம்
சிவகங்கை: ‛‛எனக்கு காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி கொடுக்கமாட்டாங்க. என்னை பொறுத்தவரை எனக்கு தலைவர் பதவி தருவதற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ தயாராக இல்லை. இதனால் என்னை அந்த பதவியில் நியமிக்கமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கேஎஸ் அழகிரி இருந்தார். அவருக்கு பிறகு தற்போது செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் காங்கிரஸ் தலைவர் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
முதலில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛2026ல் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறதா?'' என்று கேள்வி கேட்டார். அதற்கு கார்த்தி சிதம்பரம், ‛‛தேர்தல் ரிசல்ட்டை பொறுத்து தான் அது இருக்கும். தேர்தல் முடிவை பொறுத்து தான் முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் அரசியல் கட்சிகள் அனைத்துமே அரசாங்கத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் தேர்தலை சந்திக்கிறோம். அது எதார்த்த ஆசை தானே எல்லாருக்கும்'' என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛காங்கிரஸ் மாநில தலைவர் பதவி பற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர். உங்களுக்கு கிடைக்குமா?'' என்ற கேள்வியை கேட்டார். அதற்கு கார்த்தி சிதம்பரம், ‛‛எனக்கெல்லாம் கொடுக்கவே மாட்டார். நான் தலைவரானால் கட்சியை ஒரு திசையில் எடுத்து செல்வேன். ஒரு ஸ்டைலில் எடுத்து செல்வேன். என்னை பொறுத்தவரை எனக்கு தலைவர் பதவி தருவதற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ தயாராக இல்லை. இதனால் என்னை அந்த பதவியில் நியமிக்கமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.
இதை கேட்டதும் பத்திரிகையாளர், ‛‛நேர்மையானவர்கள் காங்கிரஸில் இல்லை என்று சொல்கிறீர்களா?'' என டக்கென கேட்டார். அதற்கு கார்த்தி சிதம்பரம், ‛‛அப்படி சொல்லவில்லை. என்னை விட காங்கிரஸ் கட்சியில் நேர்மையான நிறைய பேர் இருக்கிறாங்க என்று தான் அர்த்தம்'' என சிரித்தபடி கூறி சென்றார்.
தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக இல்லை. செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் செல்வபெருந்தகையை அந்த பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை கட்சி மேலிடம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. செல்வபெருந்தகை தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக நீடித்து வருகிறார். இப்படியான சூழலில் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் இப்படி பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
