கையெழுத்து போட அவருக்கு அதிகாரமே கிடையாதுங்க.. நீட் குறித்த ஆளுநரின் கருத்து.. ப.சிதம்பரம் பதிலடி
சிவகங்கை: நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், "ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது" என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்று அதன் பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர முயன்றால் அதுக்கும் தனியாக ஒரு நுழைவுத் தேர்வு (நீட்) என்று வைப்பது மேற்குறிப்பிட்ட மூன்று பொதுத் தேர்வுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது என அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

இது தவிர கோச்சிங் சென்டர், படிக்கும் நேரம் என இந்த நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவர் கையெழுத்திடவில்லை. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி ஆளுநர் மாளிகையில் 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். இதில் பங்கேற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி ஆளுநரிடம் நீட் விலக்கு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆளுநர் ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். அதாவது நீட் விலக்கு மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, "நெவர், எவர்" என்று ஆளுநர் பதிலளித்துள்ளார். அதாவது எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சிவகங்கையில் கட்சி தொண்டர்களுடன் உரையாடிய ப.சிதம்பரம், "ஆளுநரை தாண்டி குடியரசுத் தலைவர்தான் நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதில் என்ன பெருமை? இவருக்கு அதிகாரமே கிடையாது. இல்லாத அதிகாரத்தை செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார் இதற்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் 19 வயது மாணவன் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் நேற்று முன்தினம் தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இன்று அவரது தந்தையும் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications