திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய இளைஞர்.. தட்டி எழுப்பிய போலீஸ்..சிவகங்கை அருகே காமெடி சம்பவம்
சிவகங்கை: சிவகங்கை அருகே திருட சென்ற வீட்டில் களைப்பாகி மது குடித்து விட்டு போதையில் உறங்கிய திருடனை போலீசார் வந்து தட்டி எழுப்பி கையோடு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சினிமா காமெடியில் வரும் காட்சிகளை போன்று நடைபெற்றுள்ள இந்த காமெடி திருடன் சிக்கியது எப்படி என்ற விவரத்தை இங்கே காணலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
வெங்கடேசன் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்த நேரத்தில் அவரது வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தன. இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தூங்கி கொண்டு இருந்த நபர்
வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பதறிப்போன வெங்கடேசன் வேகமாக வீட்டிற்கு வந்து பார்த்தார். இதற்கிடையே போலீசாரும் உடனடியாக வெங்கடேசன் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை சுற்றிலும் பித்தளை, சில்வர் பாத்திரங்கள், சீலிங் பேன், டேபிள் பேன் என வீட்டை காலி செய்வது போல அனைத்து பொருட்களையும் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

தட்டி எழுப்பிய போலீஸ்
அந்த இளைஞரும் எதோ தனது சொந்த வீட்டில் தூங்குவது போல சுகமாக தூங்கிக் கொண்டு இருந்தார். இதைக் கவனித்த போலீசார் அந்த இளைஞரை தட்டி எழுப்பினர். கண் விழித்து பார்த்ததும் சுற்றிலும் ஆட்கள் இருப்பதையும் போலீசாரையும் கண்டதும் அந்த இளைஞருக்கு பயத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. மது போதையில் இருந்த அந்த இளைஞரை அப்படியே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். அதில், வீட்டிற்குள் திருட வந்த போது மதுபோதையில் தூங்கி வசமாக போலீசில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

மது பாட்டில் பிரியாணி பார்சல்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "வீட்டில் திருட வந்து மாட்டிக்கொண்ட இளைஞர் ராமநாதபுரம் வெட்டுக்குளம் பகுதி அருகே உள்ள மேலசேத்தன் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் என்பது அடையாளம் தெரிந்தது. வெங்கடேசன் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக மது அருந்தியிருக்கிறான். கையில் ஒரு மது பாட்டிலையும் பிரியாணி பார்சலையும் வாங்கிய சுதந்திர திருநாதன் வெங்கடேசன் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை பிரித்து வீட்டிற்குள் இறங்கியுள்ளான்.

குறட்டை வீட்டு தூங்கியுள்ளான்
வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் திருடி மூட்டையில் கட்டியிருக்கிறான். இதற்கு இடையில், கையில் வைத்திருந்த மது பாட்டில் நினைவுக்கு வரவே அதையும் குடித்து விட்டு பிரியாணியையும் சாப்பிட்டுள்ளான். மதுபோதையில் படுக்கை அறைக்குள் சென்று குறட்டை வீட்டு தூங்கியுள்ளான். நீண்ட நேரம் வீட்டில் தூங்கியதால் கையும் களவுமாக திருடன் பிடிபட்டுக்கொண்டான்" என்று தெரிவித்தனர். சினிமாவில் வரும் காமெடி திருடன் போல தானாக அந்த இளைஞர் சிக்கிக் கொண்டது குறித்து அப்பகுதி மக்கள் நமட்டு சிரிப்புடன் பேசிக்கொண்டதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications