13 முறை.. இந்த தோல்விக்கு இல்லையா ஒரு எண்டு.. 4 ஸ்பின்னர்களை இறக்கிய ரோஹித் சர்மா.. காரணமே இதுதான்!
துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 முறை டாஸில் தோல்வியடைந்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய அத்தனை ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாஸில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் டாஸில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றாலும், எந்த அணியுடன் யார் மோதப் போகிறார்கள் என்பது இந்த போட்டியின் முடிவுக்கு பின்னரே தெரிய வரும். இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதன் மூலமாக 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி தொடர்ச்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13வது முறையாக டாஸில் தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர், இலங்கை ஒருநாள் தொடர், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று தொடர்ந்து 13 போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்துள்ளது.
இதனால் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய 4 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி மட்டுமே இருக்கிறார்.
அவருக்கு உதவியாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். துபாய் மைதானத்தில் ஸ்பின்னர்களால் ஆதிக்கம் செய்ய முடியும் என்பதால், இந்திய அணி இம்முறை பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதேபோல் பவுலிங் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஜடேஜா - குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் - வருண் சக்கரவர்த்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் போதே 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சென்றது. இம்முறை 5 ஸ்பின்னர்களுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடி வரும் சூழலில், ஒரே ஆட்டத்தில் 4 ஸ்பின்னர்களை களமிறக்கி ரோஹித் சர்மா சோதனையை மேற்கொண்டுள்ளார். இருந்தாலும் அரையிறுதியில் இந்த ரிஸ்க்கை இந்திய அணி எடுக்காது என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் துபாய் மைதானத்தில் பவர் பிளே ஓவர்களுக்கு பின் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் மாற்றமடைகிறது. இன்னொரு பக்கம் 2வது பேட்டிங்கில் 15 ஓவர்களுக்கு பின் மைதானம் தேய்மானம் அடைவதால், ரன்கள் சேர்க்க நிதானமாக ஆட வேண்டும். இதனால் 4 ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணி சோதனையை செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications