23 பேர் உடல் சிதறி பலி.. மீட்பு பணியில் மீண்டும் வெடித்த விருதுநகர் பட்டாசு ஆலை.. பலர் காயம்
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஆலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மீண்டும் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதையடுத்து வீரர்கள், போலீசார், அதிகாரிகள் உள்பட அனைவரும் பதறியடித்து ஓடிய நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமானவர்கள் வேலை செய்தனர்.

அப்போது திடீரென்று பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு ஆலை தீப்பற்றி எரிந்தது. பட்டாசு ஆலை வெடித்ததில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது.
23 பேர் வரை பலி
இதுபற்றி அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 அறைகளும் தீக்கிரையாகின. அதில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் உடல் கருகி இறந்தனர். இரவு 8.30 மணி நிலவரப்படி மொத்தம் 23 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் வெடிவிபத்து
தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர போலீசார், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது திடீரென்று மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகள், போலீசார் என அனைவரும் சிதறி ஓடினர்.
தீயணைப்பு வீரர்கள் காயம்
இதில் சில தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணியின்போது மீண்டும் ஆலையில் பட்டாசு வெடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
எஸ்கேப்பான உரிமையாளர்
இதற்கிடையே தான் விபத்து நடந்த உடன் பட்டாசு ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் எஸ்கேப் ஆகி உள்ளார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications