ஆடி பிறந்ததும்! விடிந்தும் விடியாமல் பட்டுப்புடவை வாங்க முண்டியடித்த பெண்கள்! ஏன் என்னாச்சு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடி மாதம் பிறந்ததும் பட்டுப்புடவை வாங்க முண்டியடித்து சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில ஆண்களும் பட்டுப்புடவை வாங்க வந்திருந்தனர்.
ஆடி மாதம் என்றாலே ஆன்மீகம் என்பார்கள். ஆடி மாதத்தில்தான் நிறைய அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்வு, பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெறும். நிறைய ஊர்களில் ஆடித் திருவிழா களைகட்டும்.

அது போல் குலத்தெய்வங்களுக்கு ஆடி மாதம் பொங்கலிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் ஆடி பிறந்தது. இந்த மாதத்தில் யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்.
ஆடியில் திருமணம் செய்து ஆணும் பெண்ணும் கூடினால் சித்திரையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு ஆகாது என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதம் திருமணம் நடத்த மாட்டார்கள். ஆடி மாதத்திற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டாலும் பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்று ஆடி முடிந்தவுடன்தான் அழைத்து வந்துவிடுவார்கள்.

ஆடி மாதம் கணவனும் மனைவியும் பிரிந்திருக்க வேண்டும் என்பதை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஹீரோயின் ஒரு அறையிலும் ஹீரோ ஒரு அறையிலும் இருப்பார்கள். ஹீரோ, இரவு வந்து ஹீரோயினை எழுப்ப படாதபாடுபடுவார். இப்படியாக காமெடி காட்சிகள் நகரும்.
மேலும் ஆடி என்றாலே திருவிழா என்பதை தாண்டி தள்ளுபடி என்பதும் நினைவுக்கு வரும். ஆடி மாதம் துணிக் கடைகள், நகைக் கடைகளில் தள்ளுபடியில் துணி, நகை கிடைக்கும். அது போல் ஆடி மாதம் தங்கத்தின் விலையும் குறையும்.

இந்த நிலையில் இன்று ஆடி பிறந்ததும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கீழவூரணி பகுதியில் ஆர்எம்ஆர் என்ற துணிக் கடையின் ஆடி தள்ளுபடியில் பட்டுப் புடவை வாங்க அதிகாலையிலேயே மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். சூரிய உதயத்திற்கு முன்பே ஸ்டால் திறக்கப்பட்டு மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த கடையில் ஆண்டுதோறும் ஆடி 1 அன்று பட்டுப் புடவை தள்ளுபடி விலையில் கொடுக்கப்படும். இதனால் சென்னை, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், தனியார் திருமண மண்டபத்தில் குவிக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகளை அள்ளிச் சென்றனர்.

இங்கு 20 முதல் 60 சதவீதம் வரை பட்டுப்புடவைகளுக்கு சலுகை விலை கிடைக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் ஏராளமான புடவைகளை வாங்கிச் சென்றனர். நேரம் ஆக ஆக நிறைய பேர் புடவை வாங்க வந்தனர்.












Click it and Unblock the Notifications