அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக வழக்கு.. எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கோயில்களை சிறப்பாக பராமரிப்பதில்லை என பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூரில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் எச் ராஜா கலந்து கொண்டார்.
வேடசந்தூர் கூட்டத்தில் அவர் பேசுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில் சொத்து ரூ.25 கோடி வீணாகிவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

கைப்பற்ற வேண்டு
அறநிலையத் துறை கைப்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை என்றார். மேலும் இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் குறித்தும் அவரது வீட்டுப் பெண்கள் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளால் எச் ராஜா விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

கோயில்
மேலும் ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படாதோ அது போல் அறநிலையத் துறை நுழைந்த எந்த கோயிலும் உருப்படாது என்றும் அவர் பேசியதாக தெரிகிறது. இந்து அறநிலையத் துறையினரை அவதூறாக பேசிய எச் ராஜாவை கண்டித்து ஈரோடு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து அறநிலையத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

ஹெச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்
இந்த நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு ஆஜராகாமல் எச் ராஜா தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் எச் ராஜா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய பதவி
ஹைகோர்ட் குறித்தும் அவதூறாக எச் ராஜா பேசியதாக கூறப்பட்ட நிலையிலும் தொடர்ந்து வழக்கு, வாய்தா என சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக எச் ராஜா பதவி வகித்து வந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதால் பதவி பறி போனது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் என இரு தேர்தல்களிலும் தோல்வி அடைந்து கட்சி பதவி ஏதும் இல்லாமல் இருந்து வரும் எச் ராஜாவுக்கு பாஜக சிறப்பு அழைப்பாளர் என்ற புதிய பதவியை பாஜக தலைமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications