கொடைக்கானலே திகைச்சு போச்சு.. யாருங்க அந்த நசீரா.. அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
கொடைக்கானல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அமெரிக்க என்ஜினியரை வித்தியாசமான முறையில் திருமணம் செய்திருக்கிறார். எப்படி என்றால் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்து முடிந்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரத்தில் ஒரு டாக்டரின் திருமணம் நடந்த விதம் அந்த ஊர் மக்களை மட்டுமல்ல தமிழகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொடைக்கானல் நகரம் குளுகுளுவென கால நிலையுடன் இயற்கை அப்படியே உள்ள இடம் என்பதால் பலருக்கும் கொடைக்கானல் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் கொடைக்கானல் நகரம் திண்டுக்கல்லைச் சேர்ந்த நசீரா தாவூத் என்ற பெண்ணுக்கு மிகவும் பிடித்தமான நகரம் ஆகும்.
நசீரா தாவூத் திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளிப் படிப்பை படித்தது என்னவோ பெங்களூரில் தான். அங்கு மருத்துவம் பயின்று, பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்த நசீரா, அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வந்த பில் என்பவருடன் நசீராவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறி உள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டினர்.
இதையடுத்து அமெரிக்க மாப்பிள்ளையான பில்லுக்கும், இந்தியாவின் திண்டுக்கலைச் சேர்ந்த நசீராவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது தான் நசீரா தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். எப்படி என்றால், காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த கோரிக்கையை கேட்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தாலும் ஒப்புக்கொண்டனர்.
நசீராவின் விருப்பப்படி, கடந்த வருடம் காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்னர் தனது சொந்த மாவட்டமான கொடைக்கானலில் திருமணம் நடத்த நசீரா தாவூத் விரும்பினார். அதன்படியே கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மருத்துவர் நசீரா தாவூத்திற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் பில் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கடல் கடந்து நடந்த இந்த திருமணம், மிகவும் எளிமையாக நடந்தது. இதில் தம்பதி, பெற்றோர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
நசீரா மற்றும் பில் இருவரும் ஜாதி, மதம், இனம் கடந்து காதலித்ததை உணர்த்தவும் முடிவு செய்தனர். இதன்படி திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தது. மும்மதத்தைப் பறைசாற்றி நடந்த இந்த திருமணம் தான் கொடைக்கானல் நகரில் பரபரப்பாக பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications