தேசிய கட்சிகளால் பயனில்லை.. 'இந்தியா' கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி
தென்காசி: மத்தியில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுவது இல்லை. தமிழ்நாட்டை துரும்பாகத்தான் பார்க்கிறார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை உயர்த்திவிட்டார்கள்.
சொத்து வரி, குடிநீர் வரி உயர்ந்து விட்டது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேருந்து வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் விடியா திமுக அரசு சொல்கிறது. ஆனால், ஒரு புதிய பேருந்து கூட வாங்கப்படவில்லை. டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு எதிர்ப்பு வந்துவிட்டது.
மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதற்கு சனாதன விவகாரத்தை உதயநிதி கையில் எடுத்தார். அரசின் மீதான வெறுப்பை திசை திருப்புகிறார்கள். ஊழல் செய்வதற்கு திராவிட மாடல் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். திமுக ஆட்சியில் கமிஷன் இல்லாத துறையே இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது. எங்களை பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் ' இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வாரா?
தைரியம் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுவது இல்லை. தமிழ்நாட்டை துரும்பாகத்தான் பார்க்கிறார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தேர்தலில் வெற்றி பெறும். தமிழக மக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம். ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்.

சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம். திமுகவை போல மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று அதிமுக நினைக்கவில்லை. தமிழ் நாட்டு மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். எனவே தமிழர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வோம். வரும் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெறும் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். அதிமுக ஆட்சியில் உழைக்கும் பெண்களுக்காக ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை தற்போது திமுக நிறுத்திவிட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கியதையும் ரத்து செய்து விட்டனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications