சென்னையில் மீண்டும் கனமழை: வெள்ளம் வடிவது எப்போது?
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்துவருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் பெய்து வரும் மிதமான மழைக்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புறநகர் பகுதிகளாக குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளிலும் ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வீடுகள் மூழ்கியுள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களே சரியாகாத நிலையில் சென்னையில் பல இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
உள் மாவட்டங்களில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி லட்சத்தீவு கடல்பகுதியில் நிலைகொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தலா 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நிஜமாவது போல நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோட்டூர்புரம், நந்தனம், சேப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பூவிருந்தவல்லி, குன்றத்தூர், போரூர், திருநின்றவூரில் கனமழை பெய்து வருகிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் மழை நின்று சற்றே வெள்ளம் வடியத் தொடங்கியிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications