தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எனும் காப்பர் தொழிற்சாலையால் மக்களின் வாழ்வாதாரம், நீராதாரம் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் காற்று மாசுப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே இந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் 100 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 100-ஆவது நாளில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
அப்போது அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் முன்னோக்கி சென்று கொண்டே இருந்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications