மேடம் அவரு நடிக்கிறாரு மேடம்.. விஜய்யை சுற்றி வளைத்த பாஜக!
புதுவை: இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் தவெக தலைவர் விஜய், அதே கோயிலுக்கு போகிறார்.. நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, வேல் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதெல்லாம் நாடகம் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. எதோ மக்கள் தெரியாமல் ஓட்டு போட்டுவிட்டனர். இன்னும் 5 வருஷத்தில், அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன் ரெட்டி, சிரஞ்சீவி மாதிரி இவரும் காணாமல் போய்விடுவார் என பாஜக விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 106 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தவெக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் நேற்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையையும் நிரூபித்து விட்டார். இந்த நிலையில் விஜய்யை, புதுவை மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அருள் முருகன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

கோவிலுக்கு செல்வதெல்லாம் நாடகம்..
விஜய் தேர்தல் நடந்து முடிந்ததும் கோயிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டதும், வேலை கையில் ஏந்தி நின்றதும் ஏமாற்று வேலை எனவும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நேராக பெரியார் திடலுக்கு சென்று கி வீரமணியை சந்திக்கிறார்.. நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது வேல் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதெல்லாம் நாடகம்.. என விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்திப்பில் அருள் முருகன் கூறியதாவது:-
இன்னைக்கு எதோ விஜய் அதிமுகவை பிரித்து பெரும்பான்மையை நிரூபித்து இருக்கலாம். ஆனால் இன்னும் 5 வருஷத்துக்கு அப்புறம் காணாமல் போய்விடுவார். தூய சக்தி என்று சொல்கிற இவர்கள் தான் அதிமுகவை பிளவுபடுத்தியிருக்கார்.. விஜய் முதல்வராக பதவியேற்ற உடனேயே பெரியாரை போய் பார்த்தார். கி வீரமணியை போய் பார்க்கிறார். அப்போதே நீங்க தெரிஞ்சக்கணும்.
இந்து விரோதிகள்

இந்த கும்பலே இந்து சமுதாயத்துக்கு எதிராகத் தான் இருக்கனும்.. ஆனால் பார்க்கிறது, கோயிலுக்கு போறது, பொட்டு எடுத்து வைக்கிறது.. விபூதி எடுத்து வைக்கிறது. வேலை எடுத்து வைக்கிறது.. எதற்கு நீங்க கோயிலுக்கு போகனும்.. உங்களுக்கு பிடிக்கவில்லை தானே, பிறகு எதற்கு போறீங்க.. நீங்க ஏன் திருச்செந்தூர் போகனும்.. நாங்க யாரும் இப்படி பேசுறதுல்ல.. ஆனா நீங்க அப்படி பேசிவிட்டு பிறகு எதற்கு கோயிலுக்கு போறீங்க.. எல்லாம் நடிப்பு..
எப்பொழுது விஜய் திராவிட கழகத் தலைவர் வீரமணியை பார்த்தாரோ அப்போதே அவர் கதை முடிந்து விட்டது, இவர்கள் இந்து விரோதிகள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, வேல் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு போவதெல்லாம் நாடகம், இவர் எவ்வாறு தூய்மையான அரசாங்கத்தை வழங்க முடியும்.
தவெக மைனாரிட்டி அரசாங்கம்
சனாதனம் குறித்து திமுகவினர் பேசி வந்த நிலையில் இந்த தேர்தலோடு அவர்கள் காணாமல் போனார்கள், தற்போது தவெக-வினர் சனாதனம் குறித்து பேசி வருகிறார்கள் அவர்களும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் முகவரி இல்லாமல் போய்விடுவார்கள். மக்கள் ஏதோ தெரியாமல் வாக்களித்து விட்டார்கள். தமிழக வெற்றிக்கழகம் என்பது மைனாரிட்டி அரசாங்கம். திமுக கூட்டணி கட்சிகளுடனும் அதிமுகவை உடைத்து அவர்களிடம் கூட்டணி சேர்ந்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஒரு மைனாரிட்டி அரசாங்கம், இந்து சமுதாயத்திற்கு எதிரானது.
சனாதானம் பற்றி பேசுபவர்கள், ஜோதிடர் காலிலே விழுந்து கிடக்கிறார்கள், நல்ல நடிகைகளுடன் நடித்ததால் தான் விஜய் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது, விஜய் பின்பற்றுவதெல்லாம் திருக்குவளை பார்முலாவே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஜெயலலிதா சொல்லியிருக்காங்க.. அப்போது திருக்குவளையில் சரியான டிடிஆர் இருந்திருந்தால் திருட்டு ரயிலில் அவர் வந்திருக்க மாட்டார். அதே மாதிரி தான் விஜய்யும் திருக்குவளை பார்முலாவை தான் பாலோ செய்கிறார். பிரபலமான நடிகை யார் என்று பார்த்து அவர் கூட நடித்து நடித்து பிரபலம் ஆகிவிட்டார்.
கெஜ்ரிவால், ஜெகன்மோகன், சிரஞ்சீவி வரிசையில் விஜய்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்த அலை போன்று தமிழகத்தில் தவெக-வுக்கும் அலை உள்ளது. அதில் தான் விஜய் வெற்றி பெற்றார். அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சிரஞ்சீவி போன்று அந்த வரிசையில் விஜய்யும் சென்று விடுவார். தற்போது தவெக எம்எல்ஏ முஸ்தபா விஜய் சொல்லி தான் சனதானம் குறித்து பேசி வருகிறார்.
மதசார்பின்மை, சனாதானம் குறித்து தெரியாத குழந்தைகள் தனது தாத்தா பாட்டியிடம் கெஞ்சியதால் தான் வாக்குகள் விழுந்துள்ளது. நடிகர் என்பதற்காக விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி விஜய் வெற்றி பெற முடிந்ததே தவிர, இது உண்மையான வெற்றி அல்ல. சினிமா மீது உள்ள மோகத்தால் தான் விசிலுக்கு வாக்குகள் விழுந்து உள்ளது. எனவே போகப்போக விஜய்யின் ஆட்சி மக்களுக்கு புரிய வரும்" இவ்வாறு அவர் கூறினார்.















Click it and Unblock the Notifications