இந்த "காந்த்" வேண்டாம்.. அந்த "காந்த்"தைப் பார்ப்போம்.. 'கேப்டன்' டூ 'சூப்பருக்கு'த் தாவும் பாஜக!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்யும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள், பாஜகவில் இணையும் நிகழ்ச்சி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் கரு.நாகராஜன், டாக்டர் எம்.ஆர்.ஜெமிலா, சென்னை சி.ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

பாஜக கூட்டணி...
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. பா.ஜ.க. மதவாத கட்சி என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். பா.ஜ.க.வில் ஏராளமான முஸ்லிம் சகோதர-சகோதரிகள் இணைந்திருக்கிறார்கள். 50 ஆண்டுகளாக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது.

வேலைவாய்ப்பு...
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் நீங்கள் கேட்காததை எல்லாம் தருகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பு போன்றவற்றை நீங்கள் கேட்கிறீர்கள். அதை அவர்கள் தருவதில்லை. அதை உங்களுக்கு அவர்கள் கொடுத்தால் நீங்கள் சுயசம்பாத்தியம் செய்து அனைத்து பொருட்களையும் வாங்கிவிடுவீர்கள். இலவசத்தை எதிர்பார்க்கமாட்டீர்கள்.

மோடியின் திட்டங்கள்...
எனவே அதை அவர்கள் தருவதில்லை. உங்களுக்கு வருமானம் வந்தால் உங்கள் குடும்பம் முன்னேறும். பிரதமர் நரேந்திரமோடி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை குறைந்த பணத்தை நீங்கள் செலுத்தி அதை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறார்.

ஓட்டுக்குப் பணம்...
ஏன் அதை இலவசமாக வழங்கவில்லை என்றால், இலவசமாக வழங்கினால் நீங்கள் அதை உரிமையோடு கேட்கமுடியாது. அதுவே நீங்கள் பணத்தை கொடுத்து கேட்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஓட்டு போடுவதற்கு தற்போது அனைத்து கட்சிகளும் பணம் தருவார்கள். அப்படி தருபவர்கள் யோக்கியமாக அதை சம்பாதிக்கவில்லை. அயோக்கியத்தனமாக சம்பாதித்த பணத்தை தான் உங்களுக்கு தருகிறார்கள்.

மோடியின் ஆசை...
ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரையில் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம். மாறாக உங்கள் வீட்டு வேலைக்காரன் எப்படி வேலை செய்வாரோ? அதேபோல், உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உங்கள் குடும்பத்துக்காக உழைப்பார்கள். இதுதான் பிரதமர் நரேந்திரமோடியின் ஆசை.

குடும்பத்தில் ஒருவர்...
லஞ்சம் வாங்காத அரசியல்வாதி வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும். அதாவது ஓட்டுக்கு நீங்கள் பணம் வாங்கக்கூடாது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும் லஞ்சம் தான். நாங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக இருந்து உழைப்போம்' எனத் தெரிவித்தார்.

எங்களுக்குப் பொருந்தாது...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த், கிங்காக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? என்று கேட்டது தொடர்பான கேள்விக்கு, ‘ஏறக்குறைய சரியான விஷயத்தை தான் அவர் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க.வில் இருந்து எந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. அவர் யாருக்கு சொன்னாரோ அவர்களுக்கு தான் பொருந்தும். ஆகையால் எங்களுக்கு அது பொருந்தாத விஷயம்.

பாஜகவுடன் நெருக்கம்...
அவர் நெருங்கி வரவேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே அவர் பா.ஜ.க.வில் நெருக்கத்துடன் தான் இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி ஒருவருக்கொருவர் கைகோர்த்து கொண்டு தலைமை இல்லாமல் முன்னேறி சென்றோமோ, அதேபோல் இருப்போம்.

கூட்டணி அறிவிப்பு எப்போது?
திமுக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் கூட்டணி பற்றி தெளிவான முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை. தி.மு.க.-காங்கிரஸ் சேர்ந்திருக்கிறோம் என்று தான் கூறி இருக்கிறார்கள். அது எந்த நேரத்தில் எப்படி போகும் என்று அவர்கள் 2 பேருக்கும் நிச்சயமில்லாத நிலைமையில் தான் இருக்கிறார்கள். ஆகவே கூட்டணி குறித்து அவசரப்பட தேவையில்லை.

ரஜினியின் ஆதரவு...
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 5 கோடிக்கும் மேற்பட்ட அனைத்து வாக்காளர்களின் ஆதரவுகளையும் பெற வேண்டும் என்ற முயற்சிக்கிறோம். அந்தவகையில் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ஆதரவை பெற கட்டாயமாக முயற்சிப்போம். திரைப்பட தயாரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பாக அவரை சந்திப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேமுதிகவின் நிலை...
பொன்.ராதாவின் இந்த பேட்டி மூலம் புதிய சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக. தேர்தலுக்குப் பின் அதே கூட்டணியில் இருப்பது போல் விஜயகாந்த் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை.

மீண்டும் கூட்டணி...
ஆனால், தொடர்ந்து பாஜக தலைவர் தேமுதிக தங்களது கூட்டணியில் இருப்பதாகவே கூறி வருகின்றனர். கூட்டணி குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ரஜினி போதும்...
இந்த சூழ்நிலையில் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கோர பாஜக முடிவு செய்துள்ளதன் மூலம், விஜயகாந்த் பின்னால் இனி சுற்ற வேண்டாம் என பாஜக முடிவு செய்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது...
ஏனெனில் ஒருவேளை ரஜினி பாஜகவிற்கு ஆதரவு தருவதாகக் கூறினால், பிறகு தேமுதிகவின் செல்வாக்கு அக்கட்சிக்கு தேவைப்படாது. ஏற்கனவே, பிரதமர் மோடியே ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார். இதனால் ரஜினி மனது மாறுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications