நள்ளிரவில் வீட்டு வாசலில் ரத்தம்! மக்கள் பீதி! சுவரில் எழுதப்பட்ட 2 எழுத்துகளால் பரபரப்பு
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நள்ளிரவில் வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் நகராட்சிக்குள்பட்ட உச்சி சுவாமி கோயில் 4ஆவது குறுக்குத் தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. மழையால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இதையடுத்து இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டனர். இதையடுத்து அதிகாலையில் பெண்கள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வந்தனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பிறகு அப்பகுதி மக்கள் சாலையில் கூடி இது என்னவாக இருக்கும் என பேசிக் கொண்டனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன் பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு எங்கள் தெருவின் பின்பகுதியில் இதே போல் ஒரு வீட்டு வாசலில் மட்டும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. இன்று 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவிலும் ரத்தம் இருப்பதால் இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என தெரியவில்லை என்றார்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு எனக்கு தூக்கம் வராததால் 1 மணி வரை விழித்துக் கொண்டிருந்தேன். யாருடைய நடமாட்டமும் இல்லாமல்தான் இருந்தது. அதன் பிறகு யாரேனும் வந்தார்களா என தெரியவில்லை என்றார். இந்த விவகாரம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யாரையாவது பலி கொடுக்க இப்படி செய்துள்ளார்களா, மாந்திரீக வேலைக்காக இந்த ரத்தக் காவு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.
அது போல் ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி.ஆர் என எழுதியிருந்தது. அந்த ரத்தம் மனித ரத்தமா, இல்லை விலங்குகளின் ரத்தமா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications