வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. முன்னதாக அவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுபோதையில் தகராறு
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த இரு வீட்டாரின் உறவினர்களும் நண்பர்களும் ஏராளமானவர்கள் வருகை தந்து இருந்தனர். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டை சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மணமகன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய மணமகள் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணை
தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இதனால் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வருகை தந்த போலீசார் மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மணமகன் போதை ஊசியோ, மதுவோ அருந்த வில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அப்போது மணமகன் தனது செயல் தவறுதான் தன்னை மன்னித்து விடுமாறு இரு கைகளையும் கூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

நகைகளை திருப்பி கொடுக்குமாறு
ஆனாலும், கஞ்சா உள்ளிட்ட வேறு எதாவது போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட மணப்பெண் வீட்டினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட நகைகளை திருப்பி கொடுக்குமாறு மணமகளின் வீட்டினர் திருப்பி கேட்டனர். இதனால், கோபத்தில் மணமகனும் பெண் வீட்டில் அணிவித்த செயின் மோதிரங்களை வெறுப்புடன் கழற்றி கொடுத்தார்.

திணறிய போலீசார்
தொடர்ந்து இரு வீட்டினரும் வாக்கு வாதம் செய்ததால் சமாதானம் செய்ய முடியாமல் திணறிய போலீசார் மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர். அப்போது மண்டபத்தில் இருந்த சேரை மணமகன் தூக்கி வீசினார். இதனால் கடும் கோபம் அடைந்த பெண் வீட்டினர் மணமகனை அடிக்கச் சென்றனர். இந்த சம்பவங்களால் திருமண மண்டபத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மணமகனை பத்திரமாக போலீசார் அழைத்து சென்றனர். மணமகன் குடிபோதையில் இருந்ததால் மணப்பெண் திருமணமத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications