4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு
தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அதிமுக, திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மதுரை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஆளும்கட்சி, எதிர்கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சரவணன், அதிமுக சார்பில் போஸ் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகின்றனர். இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் கே.சி பழனிச்சாமி மற்றும் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகின்றனர். தஞ்சையில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி, அதிமுக சார்பில் ரங்கசாமி போட்டியிடுகின்றனர். நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மூன்று தொகுதியிலும் 139 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உத்தரகாண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி பூபால் சிங் மன்றால், தஞ்சாவூர் தொகுதிக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஷேக் அகமது, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கேரளா ஐஏஎஸ் அதிகாரி யு.வி.ஜோஷ் ஆகியோர் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் சனிக்கிழமை கடைசி நாளாகும். இம்மூன்று தொகுதிகளும் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவம் ஏ,படிவம் பில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது. இது 1968 ம் ஆண்டு சட்டமான தேர்தல் ஆணையச் சட்டத்திற்கு முரணாக உள்ளதாக கருத்துகள் வெளியான நிலையில் இன்று மூன்று தொகுதிகளிலும் திமுக வழக்கறிஞர்கள் இன்று தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்ட படிவங்கள் சட்ட பூர்மானவை அல்ல, சட்ட ரீதியாக அவைகளை ஏற்க முடியாது நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் அதிமுகவினரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளிலும் சுயேச்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்து 2 நாளில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் ஜெயலலிதா விரல் ரேகை வைத்தது செல்லாது என திமுக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2 நாளில் விளக்கம் தருவதாக தேர்தல் அதிகாரி சைபுதீன் பதில் அளித்துள்ளார்.
இது போல் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் முதல்வருமான நாராயாணசாமி வேட்பு மனு, அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரின் வேட்புமனுக்களும் ஏற்கபட்டன. வேட்பு மனு வாபஸ் பெற 5ம்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே 3 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
இதனிடையே ஜெயலலிதா விரல்ரேகை பிரச்சினை குறித்து கருத்து கூறியுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, முதல்வர் ஜெயலலிதா கையெழுத்து போடுவதற்கு பதில் இடது கை பெருவிரல் ரேகை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்பதற்கான கடிதம் அதிமுக சார்பில் என்னிடம் கடந்த மாதம் 25ம் தேதி வழங்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து 27ம் தேதி அனுமதி அளித்து, அந்த கடிதம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக கடிதம் கொடுத்து, மூன்று நாட்களுக்கு பிறகே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications