தமிழகத்தில் மிரட்டும் மின் வெட்டு: கர்நாடகாவிற்கு இடம் மாறும் கோவை தொழில்துறையினர்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் மின்சாரத் தட்டுப்பாடு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிலாளர்களை மிரட்டி வருகிறது.
மின் தட்டுப்பாடு எப்போது நீங்கும்? தங்களுக்கு விடிவே கிடையாதா? என்று கேள்வி கேட்ட தொழிற்துறையினரை ''எங்கள் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்குங்கள். உங்களுக்குத் தேவையான நிலம், தண்ணீர், மின்சார வசதிகள் உள்பட பல்வேறு சலுகைகளை நாங்கள் தருகிறோம்'' என அழைப்பு விடுத்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா.

கர்நாடக முதல்வர்
கர்நாடக மாநில வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கர்நாடக மாநிலத்தில் புதிய தொழில்கள் தொடங்குவது குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

சாம்ராஜ்நகர் தொழிற்பேட்டை
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் கெல்லம்பள்ளி, பதனக்குப்பே எனும் கிராமத்தில் 1,362 ஏக்கர் பரப்பளவில் தொழில் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குத் தமிழகத் தொழிற்துறையினருக்கு இடமும் இன்னபிற சலுகைகளும் வழங்கத் தயார் என்றார்.

ரூ. 12,000 கோடி முதலீடு
கோவை மண்டலத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் தொழில்கள் தொடங்குவதற்கு ரூ.12,000 கோடிக்கு முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டி உள்ளனர் என்று அதே மேடையிலேயே அறிவித்தார் முதல்வர் சித்தராமைய்யா.

சலுகைகள் ஏராளம்
சாம்ராஜ் நகரில் அமைக்கப்பட இருக்கும் தொழிற் பூங்காவில், உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில் உற்பத்தி, வேளாண், ஜவுளி, ஆட்டோமொபைல் உற்பத்திப் பொருட்கள், பொறியியல் தயாரிப்புப் பொருட்கள், மின் மோட்டார் தயாரிப்பு, இரும்பு உருக்கு ஆலை, கிரானைட் மற்றும் சுரங்கத் தொழில் உள்ளிட்ட தொழில்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என உறுதி அளித்திருக்கிறது கர்நாடக அரசு.

வட்டியில்லா கடன், மானியம்
இதுமட்டுமின்றி, முதலீட்டு ஊக்குவிப்பு மானியம், முத்திரைத் தீர்வையில் (ஸ்டாம்ப் டூட்டி) இருந்து விதிவிலக்கு, பதிவுக்கட்டணத்தில் சலுகை, நுழைவுக்கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு, ஏற்றுமதி தொழில் களுக்கான சிறப்புச் சலுகைகள், வேளாண் உற்பத்திச் சந்தைக்குழுக் கட்டணம், வரி, கட்டணத்தில் இருந்து விலக்கு, கழிவு நீர்ச் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மானியம், மதிப்புக் கூட்டப்பட்ட வரி அடிப்படையில் வட்டியில்லாத கடன், மின்சார வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில்…
சித்தராமைய்யாவின் அழைப்பு தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, தமிழக தொழிலதிபர்கள் வெளிமாநிலங்களுக்கு இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தமிழக அமைச்சர் பாய்ச்சல்
இந்த குற்றச்சாட்டினை மறுத்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணி, கர்நாடகத்தில் தொழில் தொடங்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா விடுத்த அழைப்பை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஏற்கவில்லை. கர்நாடக முதல்வர் கூறியதைப் போல புதிய தொழிற்பேட்டை அமைக்க சாம்ராஜ் நகரில் இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு இல்லை என்றார்.

4 மணிநேரம் மின்சாரம்
அந்தப் பகுதியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. கர்நாடகத்தில் தமிழக தொழிலதிபர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று கேட்டதற்கு நான் இருக்கும் வரை பிரச்னை இல்லை என்று சித்தராமையா சொல்லியிருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்கப் போவதில்லை என்று கோவை தொழிலதிபர்கள் அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

காவிரி பிரச்சினையை திசைதிருப்ப
காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் நிலையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று முதல்வர் ஜெயலலிதா போராடி வருகிறார். காவிரி பிரச்னை வெடித்தபோது தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத கர்நாடக அரசு தொழிலதிபர்களுக்கு மட்டும் எவ்வாறு பாதுகாப்பு வழங்கும். வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கர்நாடக முதல்வர் நடத்திய நாடகம் தான் கோவையில் நடத்திய தொழிலதிபர்கள் கூட்டம் என்றார் அமைச்சர் தங்கமணி.

வளமான மாநிலம் தமிழகம்
இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அமைதியான, வளமான மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, ஒரு தொழிலதிபர் கூட கோவையிலிருந்து கர்நாடகத்துக்கு தொழில் தொடங்க செல்லமாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி.

கோவை தொழிலதிபர்களின் நிலை
கடுமையான மின்வெட்டு இருக்கும் சூழலில் தொழிற்துறையினருக்கான எந்த வசதியும், சலுகையும் தமிழக அரசு செய்துதரத் தயாரில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் கோவை தொழில்துறையினர். இந்த சூழ்நிலையில் கர்நாடகாவின் அழைப்பு எங்களை கவர்வதில் தவறில்லையே என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இடம் மாறும் தொழிற்சாலைகள்
''சமீபகாலமாக, சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் தமிழகத் தொழிற்துறையினருக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பல முதலீடுகள் ஏற்கெனவே இடம் மாறிவிட்டன. அதேபோல சாம்ராஜ் நகர் திட்டம் மூலமும் மிகப் பெரிய அளவில் முதலீடுகள் இடம் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.

ஒப்பந்தம் போடவில்லை
கர்நாடகாவில் ரூ.12,000 கோடிக்கு முதலீடு செய்ய விரும்புவதாகத் தொழிலதிபர்கள் சொல்லியிருக்கின்றனர். இது விருப்பம்தான், ஒப்பந்தம் அல்ல. இப்போது விருப்பம் தெரிவிப்பவர்கள் அத்தனைபேரும் அங்கு சென்று தொழில் தொடங்குவார்களா என்பது சந்தேகமே. ரூ.12,000 கோடி முதலீடு இங்கிருந்துச் செல்ல வாய்ப்பே இல்லை என்கின்றனர் கோவை இந்திய தொழில் வர்த்தகச் சபையினர்.

கிரானைட், உணவு தயாரிப்புத் தொழில்கள்
கிரானைட் கட்டிங் பாலிஷிங் தொழில்கள் கோவைப் பகுதியில் செய்ய வாய்ப்பில்லை. அந்தத் தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அங்குச் செல்லலாம். அதேபோல், உணவுத் தயாரிப்புத் தொழில்கள் அங்குத் துவங்க வாய்ப்புள்ளது.
பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களுக்கு உற்பத்திப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறுந் தொழில்கள் அங்குச் செல்லக்கூடும்.

திருப்பூர் சாயப்பட்டறைகள்
திருப்பூர் டையிங் தொழிலுக்கு, சாயக்கழிவு பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளது. கர்நாடக அரசு தரப்பிலிருந்து பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தந்தால் ஒரு குழுவாக வருவதாகச் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சில தொழில்கள் இடம்மாற வாய்ப்புள்ளது.

பிரச்சினைகள் ஏராளம்
'தமிழகத்தைப் போன்று கர்நாடகா விலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் சூழல் இல்லை. சாம்ராஜ் நகர் என்பது வறட்சியான பகுதி. இங்கு தண்ணீர் வசதி அதிக அளவில் இல்லை. கபினியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.

தொழிலாளர் பிரச்சினை
மூன்றாவது, தொழிலாளர் பிரச்னை. அங்குத் தொழில் துவங்கும்போது திறமை மிகுந்த தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. இப்படித் தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் அங்கும் உள்ளது'' என்கின்றனர் கோவை தொழில்துறையினர்.

மின்சாரப் பிரச்சினை தீருமா?
தமிழ்நாட்டின் மிகமுக்கிய பிரச்சினையே மின்சாரம்தான் மிக முக்கியப் பிரச்னை. எனவே, தொழிற்துறையினருக்கு முடிந்தவரைத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க அரசே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. இதுமாதிரி தமிழக அரசாங்கம் செய்தால், இங்குள்ள எந்த முதலீடும் வெளியேறாது. ஆனால், வெளிமாநிலங்களிலிருந்து புதிய முதலீடு தமிழகத்துக்கு வரும் என்கின்றனர் தமிழக தொழில் துறையினர்.

வரிச்சலுகை தேவை
குஜராத் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட அளவுக்குமேல் முதலீடு செய்வோருக்கும், வர்த்தகம் செய்வோருக்கும் அரசு வரிச் சலுகை அளிக்கிறது. இந்த முறையைத் தமிழகம் பின்பற்றலாம். தொழில் தொடங்குவதற்கான பதிவு செய்து, உரிமம் பெறுவதில் துவங்கி, வரிச் சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறுவது வரை அனைத்தும் அரசாங்கமே செய்துவிடுகிறது. தமிழகத்திலும் அப்படி ஒரு நிலை வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலிப்பாரா?
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications