குற்றாலத்தில் ஜூலை 30 முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம்
திருநெல்வேலி: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் வரும் 30ம் தேதி முதல் சாரல் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் சாரல் திருவிழா நடைபெற உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.

குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழா வரும் 30ம் தேதி துவங்கி ஆக.6ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்காட்சி நடத்தப்படுகிறது. நீச்சல் போட்டி, கோலப்போட்டி, நாய்கண்காட்சி, ஆணழகன் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் மலர், காய்கறி, பழம், வாசனை திரவிய பயிர்கள் கண்காட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. இதற்கான கூடம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கடந்த ஆண்டு இரண்டு தினங்கள் மட்டுமே நடந்த கண்காட்சி இந்த ஆண்டு 8 நாட்கள் அதாவது இம்மாதம் 30ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications