தா. பாண்டியனின் மோசடியை அம்பலப்படுத்திய 2 பேர் இ.கம்யூ. கட்சியில் இருந்து டிஸ்மிஸ்!!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் தா. பாண்டியனின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி காவல்துறையில் புகார் கொடுத்த இருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் 1974ம் ஆண்டில் இருந்து செயல்படாமல் உள்ளது. அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரும் தற்போது உறுப்பினராகவும் இல்லை, ஒருசிலர் உயிருடனும் இல்லை.

இந்நிலையில், இந்த சங்கத்திற்கு சொந்தமான திருச்சியில் இருந்த 5 ஆயிரம் சதுர அடிமனை, சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ரபீக் என்பவருக்கு விற்கப் பட்டது. இந்த மனையின் மதிப்பு ரூ. 3 கோடி எனக் கூறப்படுகிறது. ஆனால் வெறும் ரூ. 20 லட்சத்துக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனு அளித்தார். அதன்படி, இந்த மனை கிரயம் செய்து கொடுக்கப்பட்டதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தா.பாண்டியன் மீது சேகர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக புதன்கிழமையன்று திருச்சி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
மேலும் கோவையில் கடந்த பிப்ரவரியில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் 122 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் தா.பாண்டியன் ஆதரவாளரான இரா.முத்தரசன் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில துணைச் செயலாளராக இருந்த சி.மகேந்திரன் தோல்வி அடைந்தார். மாநிலச் செயலாளர், 122 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளான சேகர், வேணுகோபால் ஆகியோர் கடந்த 10-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில்தான் திடீரென இந்த இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளின்படி, கிளை கமிட்டி முதல் அனைத்துப் பொறுப்புகளுக்கும் மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடுகள் நடந்து முடிந்து ஜனநாயக ரீதியில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப் பாட்டுக்கு மாறாக வழக்கு தொடர்வது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, கட்சித் தலைமைக்கு எதிராக அவதூறு பரப்புவது போன்ற கட்சி விரோதச் செயல்களில் எம்.சேகர், ஏ.வேணுகோபால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்டுகளிடையே கலககக் குரல்!!












Click it and Unblock the Notifications