ஆர்.கே.நகரில் ஒதுங்கியவர்கள் எங்களை ஆதரிக்கவேண்டும்: கேட்கிறார் இ.கம்யூ., முத்தரசன்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்த கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனை ஆதரிக்க வேண்டும் என்றும் இது எங்களின் பொதுவான வேண்டுகோள் என்றும் அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தி.மு.க., பாமக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டன. தேமுதிக மவுனம் சாதிக்கிறது. பாஜகவும் விலகிவிட்டது. ஆனால் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து வேட்பாளரை களமிறக்கி உள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் சி.மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நேற்றோடு முடிந்துவிட்டது. சி.மகேந்திரன் கடந்த 9ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதுவரை 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கும் இ.கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் இடையேதான் போட்டி நிலவுகிறது.
டிராபிக் ராமசாமி
இடைத்தேர்தலில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிடுகிறார். தனக்கு ஆதரவு கோரி திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சித்தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரினார் டிராபிக் ராமசாமி. ஆனால் அரசியல் கட்சியினர் யாரும் தங்களின் ஆதரவை நேரடியாக தெரிவிக்கவில்லை.
மகேந்திரனுக்கு ஆதரவு
இந்நிலையில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கம்யூனிஸ்டுகள் தரப்பில் இருந்து ஆதரவு கேட்டு கோரிக்கை வந்தால் பரிசீலிக்கும் முடிவில் இந்த கட்சிகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.
ஆதரவு தரவேண்டும்
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் அளித்துள்ள பேட்டியில், இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள கட்சிகள் எங்களை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முத்தரசன் கோரிக்கை
இந்த தேர்தலை பொறுத்தவரையில் அ.தி.மு.க.,வுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் நியாயமாக நடக்காது என அ.தி.மு.க., தரப்பினர் மீது புகார் சொல்லி ஒதுங்கிய கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மகேந்திரனை ஆதரிப்பது தான் நியாயமானது என்றும் கூறியுள்ளார் முத்தரசன்.
2016 சட்டமன்ற தேர்தல்
முத்தரசனின் கோரிக்கையை மு.கருணாநிதி பரிசீலனை செய்வாரா? என்பதுதான் அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும். ஒருவேளை இடைத்தேர்தலில் மகேந்திரனை திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கும் பட்சத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications