மெட்ரோ ரயிலில் பயணம் செய்து விட்டு கட்டணத்தைக் குறைக்கக் கோரி சிபிஎம் போராட்டம்!
சென்னை: மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் குறைந்த பட்சக் கட்டணம் 10 ரூபாயும், அதிகபட்சக்கட்டணம் 40 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் அதிகம் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். எனவே கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதன் முதலாக கட்டணக்குறைப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் முத்துராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.மூர்த்தி, மரியாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று கூறினார். அவருடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


Click it and Unblock the Notifications
