டெங்குவிற்கு திருச்சி சிறுமி பலி… பரவும் காய்ச்சல் பதறும் தமிழகம்: பீதி வேண்டாம் என்கிறது மாநகராட்சி
திருச்சி: திருச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது. சென்னை, திருச்சி, வேலூர், நெல்லை என தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல என்றும் டெங்கு காய்ச்சல் குறித்த தவறான செய்தியால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற 5 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 25 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரணமாக இருந்த காய்ச்சல் தீவிரமடையவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சிறுமி மரணம்
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமி பிருந்தா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மாநாகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

வேலூரில் காய்ச்சல்
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் வைரஸ் காய்ச்சல் பாதித்த 37 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தனி பிரிவு தொடங்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் பரவும் டெங்கு
சேலம் மாவட்டம் ஓமலூரில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் பாதிப்பு
இதேபோல நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏற்படும் நோய்களை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கீழ பாவூரில் மருத்துவமுகாம் மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் காலங்களில் பொதுமக்களுக்கு பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால், அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சென்னை மாநாகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பரிசோதனை செய்யுங்கள்
டெங்கு காய்ச்சலை முறையான "எலிசா" பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை 93 நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது சென்னை மாநகராட்சி பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள ஆய்வு தீவிரம்
முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, சென்னை மாநகராட்சி மூலம் காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலவேம்பு குடிநீர்
ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில், இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மருந்து இருப்பில் உள்ளது
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம் மற்றும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி தீவிரம்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய குடிசைப்பகுதி தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமான டயர், கொட்டாங்குச்சி மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.

கொசு ஒழிப்பு
தொற்று நோய்களை பரப்பும் "ஏடிஸ்" கொசுக்களை அழிப்பதற்கு புகை பரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான புகைப்பரப்பும் எந்திரங்கள், கொசுக்கொல்லி மருந்துகள் சென்னை மாநகராட்சியின் இருப்பில் உள்ளன.

பீதி வேண்டாம்
அக்டோபர் பொறுத்தவரை 1,522 காய்ச்சல் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், 492 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 34 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். தவறான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications