அக்கவுண்ட்டில் ரூ.1000 வரலியே.. ரூல்ஸ் மாறுதா.. "இதை" மட்டும் சொல்லாதீங்க.. கோட்டைக்கு போன கோரிக்கை
சென்னை: மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டு உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதால், அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்கள்: உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள், தகுதியற்றவர்கள் என ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு, இறுதியில், 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதேபோல, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் குறித்து, பெண்களிடம் அது சரியான தகவலா? என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தகவல் உறுதியான விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வராத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மெசேஜ்கள்: அதில், "வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்" என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்தாலும், ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்..
4 சக்கர வாகனம்: காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.
மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவியருக்கு, மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து, 23 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
ஜான்சி ராணி: பிறகு, ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் பேசியபோது, மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவியருக்கு, உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு இலவசமாக வழங்கிய, இருசக்கர வாகனத்தின் இணைப்பு சக்கரத்தை, நான்கு சக்கர வாகனம் என கணக்கு காட்டி, உரிமை தொகை மறுக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றன.. இதன், வாயிலாக, 2,000 மனுக்கள் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதுகாப்பு உரிமைகள்: அதுபோலவே, மதுரை மாவட்டத்திலும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும், குடும்பத்திலுள்ள அனைத்து பெண்களுக்கு நிபந்தனையின்றி ரூ.500 வழங்கப்படுவதைபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கும் நிபந்தனையின்றி உடனடியாக மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
ரூல்ஸ் மாறுது: அதுபோலவே, நாமக்கல் மாவட்டத்த்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "அதிக அளவில் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு , அரசு விலையில்லாமல் வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரை காரணம் காட்டி, கலைஞர் உதவித்தொகை மறுப்பதை கைவிட வேண்டும்" என்று கோரப்பட்டது. தமிழகமெங்கும் மாற்றுத்திறனாளிகள் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கைகள் இப்படி பறந்துள்ள நிலையில், விரைவில், நிபந்தனையின்றி உரிமைத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications