குமரகுரு பேச பேச.. கர்சீப்பில் முகத்தை துடைத்துக்கொண்டேயிருந்த பிரேமலதா.. நெகிழ்ந்த கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிரேமலதா பேசியதை கேட்டு, உறைந்து போய்விட்டனர் தேமுதிகவினர்.. என்ன நடந்தது?
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கடந்த வாரம் முதல் தன்னுடைய பிரச்சாரத்தை, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கோவையிலிருந்தே துவங்கியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

பாஜக: வழக்கமாக, தேமுதிகவின் பிரச்சாரம் என்றாலே திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது இயல்பான விஷயம்.. ஆனால், இந்த முறை பாஜகவையும் சேர்த்தே விமர்சித்திருக்கிறார் பிரேமலதா.
இதற்கு முன்பு பாஜகவை, தேமுதிக கடுகளவுகூட விமர்சித்தது கிடையாது.. இத்தனைக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான அனைத்து முழுமுதற் முயற்சிகளை எடுத்தும்கூட, நூலிழையில் தேமுதிகவை நழுவவிட்டது பாஜக. இப்படிப்பட்ட சூழலில், திமுகவை போலவே, பாஜகவையும் இழுத்து கொண்டுவந்து தேமுதிக விமர்சித்துள்ளது தமிழக மக்களின் கவனத்தை குவிய வைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, பிரேமலதா தன்னுடைய பிரச்சாரத்தில், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
ரிஷிவந்தியம்: இப்படிப்பட்ட சூழலில், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்துள்ளது.. இதில் பிரேமலதா பங்கேற்றிருந்தார்..
அப்போது, கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, "நான் எனக்காக வாக்கு சேகரிக்க வர வேண்டும் என்று பிரேமலதாவை கேட்டற்கு கண்டிப்பாக வருவதாக சொல்லி, என்னை பெற செய்வதுடன், என் தொண்டர்களையும் விடமாட்டேன் என்றார்.. இந்த அளவுக்கு என் மீதும் தொண்டர்கள் மீதும் பாசம் வைத்துள்ள என்னுடைய சகோதரியை நினைத்து மனம் குளிர்கிறது" என்றார்..
தொண்டர்கள்: தொடர்ந்து உரையாற்றி கொண்டிருந்த குமரகுரு, "கேப்டன் இல்லை என்றாலும், உங்களை பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம்" என்று சொன்னதுமே, அங்கு திரண்டிருந்த மொத்த தொண்டர்களும் கைகளை தட்ட துவங்கிவிட்டார்கள்.. உணர்ச்சிப்பெருக்கில் கைகளை தட்ட, மேடையில் உட்கார்ந்திருந்த பிரேமலதாவுக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது..
குமரகுரு பேசப்பேச கர்சீப்பால் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டேயிருந்தார்.. தொண்டர்களின் உணர்ச்சிப்பெருக்கை பார்த்து, அவருக்கு மேலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது..
கண்ணீர்: சிறிது நேரம் கழித்து, பிரேமலதா பேசவந்தார்.. "குமரகுர பேசும்போது, மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு துக்கம் தாங்க முடியவில்லை.. நெஞ்செல்லாம் அடைத்துக்கொண்டது.. என்னையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது..
தமிழ்நாட்டில் எந்த தொகுதிக்கு போனாலும் நான் ரொம்ப தைரியத்துடன் பேசுவேன். ஆனால் கேப்டன் வாழ்ந்த இந்த ரிஷிவந்தியம் மண்ணை என்னால் மறக்க முடியவில்லை... ரிஷிவந்தியம் சிறப்பான தொகுதி... அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி. அதனால், அவரது ஆன்மா இந்த ரிஷிவந்தியத்தில் தான் உள்ளது.
கேப்டன் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க... 2 நாள் யாருமே சாப்பிடாமலேயே டிவி முன்பு நீங்கள் காட்டிய அன்பு பல மடங்கு.. கவலைப்படாதீங்க... கேப்டன் நம்மளை விட்டுட்டு போயிட்டாரு என்று நினைக்காதீர்கள். உங்கள காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்... நான், என்னுடைய 2 மகன்கள் உங்களுக்காகவே இருப்போம்...
மீண்டும் கண்ணீர்: இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்" என்று சொன்னபோது, மீண்டும் கூட்டத்தை பார்த்து பிரமேலதா கண்ணீர் விட்டு அழுதார்.. மீண்டும் கர்சீப்பால் கண்களை துடைத்துக்கொண்டு பேசி முடித்தார். மொத்தத்தில், ரிஷிவந்தியம் பிரச்சாரத்தில் நெகிழ்ச்சியுடன் முடிந்தது.












Click it and Unblock the Notifications