'குடிமகன்' பேச்சால் பஞ்சாயத்து.. சபாநாயகருடன் தே.மு.தி.க. மோதல்- தொடர் முழுவதும் சஸ்பென்ட்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சட்டசபையில் அமளி துமளி நிலவியது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் 17-ந் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் வரும் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

DMDK MLAs suspended from Tamil Nadu assembly for rest of budget session

இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதும் வெளியேற்றப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2வது நாளாக நடைபெற்றது.

"சிட்டிசன் என்ற குடிமகன்"

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு பேசுகையில், மக்களை ஏமாற்றி எம்.எல்.ஏ. ஆன சிலர் இந்த சபைக்கு வருவது இல்லை. அதில் ஒருவர் முதியவர். மற்றொருவர் சிட்டிசன். அதாவது குடிமகன் என்றார்.

அவர் இப்படி பேசியதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு பேசிய குறிப்பிட்ட வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நத்தம் விசுவநாதன், உறுப்பினர் யாரையும் பெயர் குறிப்பிட்டு பேசவில்லை. நீங்களே கற்பனையில் பொருள் கொள்ளக் கூடாது. சிட்டிசன் என்ற ஆங்கில வார்த்தைக்கு அவர் தமிழில் விளக்கம் சொன்னார். அவ்வளவு தான் என்றார்.

ஆனால் நத்தம் விசுவநாதனின் விளக்கத்தை ஏற்காமல் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ மோகன்ராஜ் சபாநாயகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், உறுப்பினர் யாரையும் குறிப்பிட்டு பேச வில்லை. அனைவரும் உட்காருங்கள். இங்கு பேசுபவர்கள் யாரையும் குறிப்பிட்டு பேச கூடாது என்றார்.

இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு தொடர்ந்து பேசினார்.

பதிலடி கொடுத்த தே.மு.தி.க.

அவர் பேசி முடிந்ததும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மோகன்ராஜ் எழுந்து பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடும் வகையில் ஒரு வாசகத்தை சொன்னார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதிலுக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று பேசினார்கள். இதனால் சபையில் கடும் அமளியும் கூச்சலாகவும் இருந்தது.

இதனால் குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர் இது போன்று பேசக்கூடாது. இப்படி பேச உரிமை இல்லை. அவைக்கு குந்தகமாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்றார்.

அமளி- துமளி

இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் சபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.

தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க் கள் சிலர் சபாநாயகர் இருக்கை அருகே வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவர்களை பார்த்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை பார்த்து சபாநாயகர் உட்காரும்படி பல முறை கூறினார். ஆனால் தே.மு.தி.க. எல்.எல்.ஏ.க்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

தொடர்ந்து சபையில் அமளி காணப்பட்டது. இதனால் மோகன்ராஜை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தர விட்டார். சபை காவலர்கள் உள்ளே வந்தனர்.

அவர்களுக்கும் சில தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மோகன்ராஜ் கையைப்பிடித்து இழுத்து வெளியேற்ற விடாமல் சபை காவலர்களை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தடுத்தனர்.

இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபை முனைவர் நத்தம் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்தார்.

உடனே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆனாலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சபை லாபியில் உட்கார்ந்து தர்ணா செய்தனர். அப்போது சபாநாயகருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

உடனே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சபை லாபியில் இருந்தும் வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி அனைவரும் லாபியில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

கொலைவெறியுடன் ....

இதைத் தொடர்ந்து சபை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், தே.மு.தி.க உறுப்பினர்கள் இந்த சபையை நடத்த விடாமல் குந்தகம் விளைவிக்கும் வகையில் தரக்குறைவாக நடந்து கொண்டார்கள். சபாநாயகரை தாக்க முயன்றனர். அவர் இருக்கையை பிடித்து இழுத்து அங்கிருந்த ஆவணங்களையும் காகிதங்களையும் கீழே தள்ளி மிதித்து தரக்குறைவாக நடந்து கொண்டார்கள்.

மற்ற எதிர்கட்சியினரும் இதை பார்த்து கொண்டுதான் இருந்தனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார் மற்றும் அவருடன் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை தாக்க கொலை வெறியுடன் வந்தனர். காவலர்கள் மீது தாக்கி, அவர்களது தொப்பிகளை வீசி எறிந்தனர்.

அவர்கள் இந்த சபைக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தி விட்டனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தே.மு.தி.க. உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் தற்காலிக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

சபாநாயகரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட சந்திரகுமார் மற்றும் அவருடன் தொடர்புடைய மற்றவர்களை அடுத்த கூட்டத் தொடர் வரை தற்காலிக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

சஸ்பென்ட்

பின்னர் சபாநாயகர் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிட்ட படி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் சந்திரகுமார் மற்றும் சிலர் அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

மேலும் தம்மை தாக்க வந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் கண்டனமும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ மு.க.ஸ்டாலின் எழுந்து, சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் குறிப்பிட்ட வார்த்தையை சொன்னதால்தான் எதிர் க்கட்சி துணைத் தலைவர் அதுபற்றி பேச வேண்டியது ஏற்பட்டது என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், தீர்ப்பு வழங்கிய பிறகு அது பற்றி கருத்து கூறக்கூடாது என்றார்.

ஆனாலும் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் இந்த தண்டனையை மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்றார். ஆனால் சபையில் எந்த முடிவும் சொல்லப்படவில்லை.

பிரச்சனை என்ன? - மோகன்ராஜ்

சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மோகன்ராஜ், சந்திரகுமார் இருவரும் வெளியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறையில் நான் எழுந்து பேசினேன். ஆளுநர் உரையில் மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெறவில்லை. மாறாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை புகழ்ந்து பேசுகிறாரே இது நியாயம் தானா? என்று வினவினேன். இதற்கு சபையில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது நான், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக பேரவைச் செயலாளர் ஜமாலுதீன்தான் அறிவித்தார். அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டதைத் தான் நான் இன்று அவையில் தெரிவித்திருக்கிறேன். நான் புதிதாக ஒன்றும் கூறவில்லை என்றேன்.

நான் குறிப்பிட்ட 'அந்த' வார்த்தையை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் கோஷமிட்டனர். சிலர் எங்களை அடிக்க முயன்றனர்.

அவைத்தலைவர் சர்வாதிகாரியைப் போல் சபைக் குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்கியதோடு, எங்களை கூண்டோடு வெளியேற்றுமாறும் உத்தரவிட்டார். சட்டசபை ஜெயலலிதாவின் புகழ் பாடும் மன்றமாகிவிட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+