வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும்: மத்திய குழு தலைவர் பேட்டி
சென்னை: வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும் என்று மத்திய குழு தலைவர் பிரசாத் டெல்லி கிளம்பும் முன் சென்னையில் விமான நிலையத்தில் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது.

இந்த குழுவினர் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளான கோட்டூர்புரம், மயிலாப்பூர், விருகம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைமைச் செயலாளருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து மத்திய குழுவினர் இன்று தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் ஆய்வை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டனர். இதனிடையே மத்திய குழு தலைவர் பிரசாத் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். வெள்ள சேதங்களை ஆய்வு செய்ததற்கு தமிழக அரசு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தது. தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார்.
மத்திய குழுவினர் ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிவாரண நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications
