வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது... ஆடி மாதத்தையொட்டி பூக்கள் விலை கூடியது!
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாத காலமாக உயர்ந்திருந்த காய்கறி விலை சற்றுக் குறைந்துள்ளது. ஆனால், இதற்கு மாறாக ஆடி மாத திருவிழாக்களை ஒட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், தக்காளி கிலோ ரூ.70க்கும் விற்கப்பட்டது. வெண்டைக்காய், அவரைக்காய், கேரட், பச்சை மிளகாய் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஆனால் இப்போது காய்கறிகளின் வரத்து ஓரளவு அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி விலை சற்றுக் குறைந்துள்ளது.
ஆனால், ஆடி மாதத்தை முன்னிட்டு கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

காய்கறி வரத்து உயர்வு...
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, பெரியபாளையம், ஊட்டி மற்றும் சில மாவட்டங்களில் இருந்தும் ஏராளமாக காய்கறிகள் வரத்தொடங்கியுள்ளன.

மகிழ்ச்சி....
இதனால் ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் குடும்பத்தலைவிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தட்டுப்பாடு...
இந்நிலையில், தற்போது ஆடி மாத கோவில் திருவிழா நடந்து வருவதால் தினமும் கோவில்களுக்கு பூ அதிகம் வாங்கப்படுகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு சென்னையில் ‘பூ' விலை உயர்ந்துள்ளது.

பூக்கள் விலை உயர்வு...
சென்னையில் பூ விலை நேற்று விற்கப்பட்ட விலையில் இருந்து இன்று 40 ரூபாய் முதல் அதிகரித்துள்ளது. 80 ரூபாய்க்கு விற்ற ஸ்டார் ரோஸ் இன்று கிலோ ரூ.140-க்கு விற்கப்படுகிறது.

மல்லி, கனகாம்பரம்...
சாமந்தி ‘பூ' கிலோ ரூ.300-க்கு விலை உயர்ந்து விட்டது. கனகாம்பரம் 100 கிராம் 60 ரூபாய்க்கும், மல்லி 300 கிராம் ரூ.120-க்கும் விலை உயர்ந்துள்ளது. அரளி பூ 1 பாக்கெட் ரூ.150-க்கும் செண்டு மல்லி ரூ.80-க்கும் விற்பனையாகிறது. தாமரை 1 பூ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இருமடங்காகும்...
வரலட்சுமி நோன்பு வர இருப்பதையொட்டி இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பூ' விலை இருமடங்காக உயர்ந்துவிடும் என்றும் மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓசூர் ரோஜா....
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஓசூரில் இருந்து ரோஸ் பூக்களும், பெரிய பாளையம் பகுதியில் இருந்து மற்ற பூக்களும் விற்பனைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications