ஜனாதிபதி உரை பாஜகவின் வார்த்தை வாய்ஜாலம்: ஞானதேசிகன் தாக்கு
சென்னை: ஜனாதிபதியின் உரை பாஜகவின் வார்த்தை வாய்ஜாலம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜனாதிபதி உரை நடைமுறை சாத்தியமற்ற கவர்ச்சி காதிக அறிக்கையாகும். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான இலங்கை தமிழர் பிரச்சினை, இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை, சேதுசமுத்திர திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவைகள் எல்லாம் இடம்பெறாத ஜனாதிபதி உரையை தமிழக அரசியல் கட்சிகள் சில அதிமுக உட்பட பாராட்டுவது விந்தையாக உள்ளது. குடியரசுத் தலைவர் உரையில் புதிய 100 நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது கிராம முன்னேற்றத்திற்கு தடை வகுக்கும், நகரமயமாக்கலை ஊக்குவிக்கும். வைர நாற்கர ரெயில் திட்டம் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய நகரம், புதிய ஐ.டி.ஐ., ஐ.ஐ.எம், அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் துவங்கப்படும், டிஜிட்டல் இந்தியா, இளைஞர் மேம்பாட்டு திட்டம் போன்றவை ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியவை தான்.
குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற திட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளிநாட்டு முதலீடுகளை குறை கூறியவர்கள், வெளிநாட்டு முதலீடு மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருப்பது விந்தையாக உள்ளது. புதிய வேலை வாய்ப்பு திட்டம், புதிய தொழில் துவங்கும் திட்டம், புதிய தொழிற்சாலை ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லை. நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான திட்டம் ஏதுமில்லாமல், புதிய அறிவிப்புகளை அறிவித்திருப்பது புதிய அரசின் கவர்ச்சி வார்த்தை, வாய்ஜால அரசாக உள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் நாட்டின் நாடாளுமன்றத்தையே பாதுகாக்க தவறியவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அறிவித்திருப்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பாஜகவின் தேர்தல் பிரசாரம் இன்னும் முடியவில்லை என்கிற உணர்வுதான் ஏற்படுகிறது. மொத்தத்தில் ஜனாதிபதி உரை என்பது பாஜகவின் வார்த்தை வாய்ஜாலம் ஆகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications