2 மணிநேரமாக போலீசார் என்ன செய்தனர்? ஸ்வாதி உடலில் ஏன் துணி போர்த்தவில்லை? ஹைகோர்ட் அதிரடி கேள்வி
சென்னை: சுவாதி கொலை வழக்கில், தானாக முன்வந்து விசாரணையை தொடக்கியுள்ள சென்னை ஹைகோர்ட், தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறைக்கு சரமாரி கண்டனங்களை தெரிவித்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தானாக முன்வந்து விசாரணையை தொடக்கியுள்ளது.
தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞரான சண்முக வேலாயுதத்திடம், நீதிபதிகள் சம்பவம் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
காலையில் வழக்கு விசாரணையின்போது ஹைகோர்ட் எழுப்பிய கேள்விகள் இவை:
*கொலை குற்றவாளியை கைது செய்வதில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து செயல்படுவதில் ஏதேனும் இடையூறு உள்ளதா?
*ரயில்வே போலீசார் மற்றும் சென்னை போலீசார் நடுவே இணக்கம் கிடையாது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதே. அது உண்மையா?
* கொலையாளியை பிடிப்பதில் ஏன் இந்த தாமதம்? காரணத்தை தமிழக அரசு கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
*நீதிமன்றத்தில் நடக்கும் வேலைகளை மட்டும் பார்த்துவிட்டு செல்லமாட்டோம். எங்கே குற்றங்கள் நடந்தாலும், அதை நீதிமன்றம் தட்டி கேட்கும்.
*கொலையாளியை பிடிப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்து கோர்ட் தானாக விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதியிடம் ஆலோசித்துவிட்டு முடிவு செய்ய உள்ளோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். ஹைகோர்ட்டில் அடுக்கடுக்கான கேள்விகளால் அவசரமாக வழக்கை சென்னை போலீசாரின் கைகளுக்கு மாற்றினார் டி.ஜிபி. இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர்.
இதைத்தொடர்ந்து மதியம் இதே வழக்கு நீதிபதிகள் முன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போதும் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்து தமிழக அரசு வழக்கறிஞரை ஆட்டம் காண செய்தனர் நீதிபதிகள்.
*சுவாதி கொலை நடந்து 2 மணி நேரம் ஆகியும் போலீசார் வராமல் என்ன செய்து கொண்டிருந்தனர்?
*உயிரிழந்தவரின் கண்ணியம் காக்கப்படவில்லை. உயிரிழந்தவரின் உடல் மீது உடனடியாக துணி போர்த்தாமல் இருந்தது ஏன்?
*ரயில்வே போலீசாரிடம் இருந்து சென்னை போலீசுக்கு வழக்கை மாற்ற 3 நாட்கள் ஆகுமா? ஏன் தாமதமாக வழக்கு மாற்றப்பட்டுள்ளது?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, போலீசாரின் தாமதத்தை கண்டிக்கவும் செய்தனர். இதையடுத்து பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் "கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க, உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடியும், மத்திய குற்றப்பிரிவும் அவருக்கு உதவும்" என்றார்.












Click it and Unblock the Notifications