தமிழின துரோகி என கூறிவிடுவார்கள்.. அதை மட்டும் சொல்ல மாட்டேன்.. ஹிப்ஹாப் ஆதி
சென்னை: எங்களை தமிழின துரோகி எனகூறிவிடுவார்கள் என்பதால்தான் மாணவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என கூறமாட்டேன்.
சென்னையில் நிருபர்களுக்கு இன்று இரவு பேட்டியளித்தார் ஜல்லிக்கட்டு ஆதரவாளர், ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் கூறுகையில்,

இப்போது ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் என்பது நிரந்தர வெற்றிதான். ஆனால் நாம் எந்த வகையான சட்டம் போட்டாலும் கோர்ட்டுக்கு போய் அதற்கு தடை பெறலாம். யாரையும் கோர்ட்டுக்கு போகக்கூடாது என தடுக்க உரிமை கிடையாது.
எனவே ஒருவேளை நாளைக்கு யாராவது சட்டத்திற்கு தடை பெற்றால் எங்களை (ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்) தமிழின துரோகிகள் என்பார்கள். இதனால்தான், நாங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என வெளிப்படையாக சொல்ல பயப்படுகிறோம். ஆனால் 99 சதவீதம் இந்த சட்டத்திற்கு தடை கோர முடியாது என்பதுதான் உண்மை.
நாங்கள் மக்கள் கூட்டம் சேர்க்கவில்லை, அவர்களாக கூடினர். எனவே கலைந்து செல்லுங்கள் என நாங்கள் கேட்க முடியாது. விவரத்தை சொல்லிவிட்டோம். இனி மாணவர்களே முடிவெடுத்துக்கொள்ளட்டும்.
ஏனெனில் இப்போது போராட்டம் திசை மாறி போகிறது. கோவையில் சிலர் போராட்ட களத்தில் தேசிய கொடியை எரிக்க முற்பட்டனர். புதைக்க முற்பட்டனர். கூட்டத்தில் ஒருவர், முஸ்லிம்களுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்பு இல்லை என கத்தினார்கள். இப்படி சமூக விரோதிகளும் மாணவர்கள் போராட்டத்திற்குள் நுழைந்துவிட்டனர். எனவே போராட்டம் திசைமாறி மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என அஞ்சுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications