நான் மோடியின் கொள்கை பரப்பு செயலாளரோ, ஜெயலலிதாவின் ஆலோசகரோ அல்ல: சோ
சென்னை: நான் சாதாரண வாக்காளன்தான். எனக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு வாக்களிப்பேன். நல்லதிற்காக எழுதுகிறேன். நரேந்திர மோடி நல்லவர் என்று நம்புவதால் அவருக்கு ஆதரவாக எழுதுகிறேன். அதற்காக நான் மோடியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் கிடையாது என்று துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி கூறியுள்ளார்.
அதேபோல தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் அரசியல் ஆலோசகர் கிடையாது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார் சோ. பெரும்பாலான கேள்விகள் பாஜக ஆதரவு, நரேந்திர மோடியைப் பற்றியும் கேட்கப்பட்டது. விடுதலைப்புலிகளைப் பற்றியும், திமுக, அதிமுக நிலைப்பாடு பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், நையாண்டியாகவும் பதிலளித்தார்.

மக்களைக் கவரும் தலைவர் மோடி
அத்வானி மிகச்சிறந்த தலைவர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அத்வானி சிறந்த உள்துறை அமைச்சர். அவர் நல்ல நிர்வாகி. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்களைக் கவரக்கூடிய தலைவர் நரேந்திர மோடிதான். மோடியின் உத்வேகம் நாட்டுக்குத் தேவை.
மோடி முல்லா
நரேந்திர மோடிக்கு எதிராக மதவாத கோஷத்தை முன்வைக்கிறது காங்கிரஸ். ஆனால் குஜராத்தில் இஸ்லாமியர்கள் மோடியை முல்லா என்று நினைத்து போற்றுகின்றனர். சிறுபான்மையின மக்களையும், இந்துக்களையும் அவர் சரிசமமாகத்தான் மதிக்கிறார்.
ராமர் கோவில் கட்டினால் தவறா?
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று அமீத்ஷா அச்சுறுத்துகிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சோ, ராமர் கோவில் கட்டினால் என்ன வந்துவிடப் போகிறது? ராமர் கோவில் கட்டக்கூடாது என்று கூறும் போது, கட்டுவோம் என்று கூறக்கூடாதா? ராமர் என்ன எல்லோருக்கும் சாபமா கொடுக்கப் போகிறார் என்றார்.
ஆர்.எஸ்.எஸ் ரிமோட் கண்ட்ரோல்
மன்மோகன்சிங் எப்படி சோனியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறாரோ? அதேபோல மோடியை ஆர்.எஸ்.எஸ்தான் இயக்குகிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சோ, யாருடைய கட்டுப்பாட்டிலும் மோடி இல்லை. மோடியின் மக்களைக் கவரும் சக்தி, நிர்வாகத்திறமை போன்றவை ஆர்.எஸ்.எஸ்க்கு பிடித்துவிட்டது. அதனால்தான் அவர்கள் மோடியை ஆதரிக்கின்றனர் என்றார்.
கொள்கைப் பரப்புச் செயலாளர்
மோடியை ஆதரித்து எழுதுவதாக கூறுகின்றனர். மொராய்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி ஆகியோரையும் நான் ஆதரித்து எழுதியிருக்கிறேன். இப்போது நான் மோடியை ஆதரித்து எழுதுகிறேன். என்னுடைய மனது எதை உண்மை என்று நம்புகிறதோ அதை ஆதரித்து எழுதுவேன் என்றார்.
காங்கிரசை பாராட்டியிருக்கிறேன்
காங்கிரஸ் கட்சியை பலமுறை பாராட்டியிருக்கிறேன். நாட்டை ஒருங்கிணைக்கும் சக்தி காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு என்று கூறியிருக்கேன். அந்நிய நேரடி முதலீடு, அணு ஆயுதக்கொள்கை போன்ற விஷயங்களில் மன்மோகன் சிங்கின் நடவடிக்கையை பாராட்டியிருக்கிறேன்.
மோடி பிளவுபடுத்துவரா?
மோடி இந்தியாவின் பிரதமரானால் நாட்டை பிளவுபடுத்துவிடுவார் என்கிறார்களே? என்று கேட்டதற்கு? எப்படி பிளவுபடுத்துவார்? எங்கிருந்து எதுவரை கோடு போடுவார் என்று கேள்வி கேட்டார் சோ.
ஜெ.யின் ஆலோசகரா?
நான் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என்று பத்திரிக்கைகள் வதந்தியை பரப்புகின்றனர். அவர் என்னிடம் ஆலோசனை கேட்பதில்லை. அவர் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு நான் ஆலோசனை சொல்ல வேண்டிய நிலையிலும் அவர் இல்லை.
ஜெ. மூன்று ஆட்சி காலத்தில்...
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக ஆட்சி செய்தது திருப்தியில்லை. 2001- 2006ல் இரண்டாம் முறையாக நன்றாகத்தான் ஆட்சி செய்தார். ஆனால் மக்கள் தோற்கடித்துவிட்டனர். மூன்றாவது முறையாக இப்போது முதல்வராகியிருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகள் பாக்கியிருக்கிறதே பார்க்கலாம்.
திமுக எதிர்ப்பு நிலை
தமிழகத்தில் திமுக பலமிழக்க வேண்டும். கருணாநிதி தன்னுடைய குடும்பத்திற்காகவே பார்க்கிறார். கட்சிக்கோ, மக்களுக்கோ நன்மை செய்யவில்லை. ஜாதி உணர்வை தூண்டுகின்றனர். ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகியவைதான் திமுகவை எதிர்க்க காரணம்.
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்..
இலங்கையில் போர்க் குற்றம் நடைபெற்றது என்கின்றனர். என்னைக் கேட்டால் இலங்கையில் நடைபெற்றது போரே அல்ல, தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற ராணுவ நடவடிக்கை. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை அழிக்க ராஜபக்சே செய்தது சரியானதுதான்.
ஸ்டாலின் தலைவராகலாம்
திமுகவின் தலைமையை ஸ்டாலின் ஏற்கத் தகுதியானவர்தான். அழகிரியின் நீக்கத்தினால் திமுக சில இடங்களில் வலுவிலக்கும்.
மும்முனைப் போட்டி
தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்படலாம். மோடி அலையால் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றார் சோ.
பாஜக - மதிமுக கூட்டணி
ஓட்டுக்காகத்தான் இப்போது பாஜக- மதிமுக கூட்டணி சேருகின்றனர். இதில் கொள்கை கிடையாது. தமிழகத்தில் ஒரு போதும் மூன்றாவது அணி உருவாகாது.
ஜெ வேறு மோடி வேறு
ஜெயலலிதாவை இன்னொரு மோடி என்கின்றனரே என்ற கேட்கப்பட்டதற்கு ஜெயலலிதா வேறு நரேந்திர மோடி வேறு என்றார். நானென்ன மோடி சப்ளையரா என்று கேள்வி கேட்டார் சோ.












Click it and Unblock the Notifications