ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்திருந்தால் யோகி மாதிரிதான் இருந்திருக்கும்! திருமாவளவன் ஒரே போடு
நெல்லை: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்து இருந்தால் யோகி ஆதித்யநாத் ஆட்சி மாதிரிதான் அவரது ஆட்சி இருந்து இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தற்போது ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே பட வேலைகள் முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகளுக்கு பின்னர் இமயமலை சென்றதாக ரஜினிகாந்த் கூறினார். வழக்கமாக இமயமலை பயணம் முடிந்ததும் ரஜினி சென்னை திரும்புவது வழக்கம்.

ஆனால் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற ரஜினிகாந்த் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பையடுத்து ஜார்கண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று ரஜினிகாந்த் சாமிதரிசனம் செய்தார். ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக்கொண்டதும், உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்ற ரஜினிகாந்த், அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், வரவேற்க வாசலுக்கு வந்த யோகியின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. தன்னை விட வயது குறைந்த யோகி ஆதித்ய நாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி பெற்றதற்கு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்து இருந்தால் யோகி ஆதித்யநாத் ஆட்சி மாதிரிதான் அவரது ஆட்சி இருந்து இருக்கும் என்று விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர் மீது சாதிய போக்குடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த் - யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்தும் விமர்சித்து பேசினார். தொல் திருமாவளவன் கூறியதாவது:-
யோகி ஆதித்யநாத் காலில் போய் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து இருந்தால்.. ஆட்சி அமைத்து இருந்தால்.. யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனது போல தமிழ்நாடு ஆகியிருக்கும். எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. எவ்வளவு உயர்ந்த இடத்தில் ரஜினிகாந்தை நாம் வைத்திருந்தோம்.

தலைவர்களை போய் சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினை இல்லை. ஆனால் ரஜினிகாந்த் போய் காலடியில் போய் வணங்குகிறார். அதற்கு என்ன பொருள். யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கும் உறவு... ஆனால் உங்களைப் (ரஜினிகாந்த்) பற்றி தமிழக மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்து கொண்டு இருந்தார்கள்.
எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருந்தது என்பதை நீங்கள் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில் தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications