அரசியலில் நுழைய ஆழம் பார்க்கும் இளவரசி மகள்.... சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் பதிவுகள்!
சசிகலா குடும்பத்தின் அடுத்த அரசியல் வரவாக வரப் போகிறாரா இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா என்ற கேள்வியை அவரது முகநூல் பதிவுகள் எழுப்புகின்றன.
சென்னை : சசிகலா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் ஜெயானந்திற்கு அடுத்தபடியாக அரசியலுக்கு தான் வருவதற்கான
முன்னோட்டமாக இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா சில பதிவுகளை போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா குடும்பத்தினரை கட்சியையும், ஆட்சியையும் விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு விலகிச் சென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இப்போது தான் உண்மையிலேயே கட்சியில் சசிகலா குடும்பத்தினர் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனரோ என்ற சந்தேகங்களை கிளப்புகின்றன.
சமூக சேவகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சசிகலாவின் அண்ணன் மகள் அதாவது இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, அரசியலுக்கு வர உள்ளதாக பெரும்பிரளயம் கிளம்பியது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடை, உடை பாவனைகளில் மாற்றம் கொண்டு வந்த கிருஷ்ணபிரியா தான் போயஸ் கார்டனின் அடுத்த இளவரசி என்றும் தகவல்கள் வெளிவந்தன.
அரசியல் பயிலும் அடுத்த வாரிசு மிடாஸ் மது உற்பத்தி நிறுவனம் முழுவதும் கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் ஜெயலலிதா கஜானா அனைத்தும் கிருஷ்ணப்ரியா கட்டுப்பாட்டில் இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஏற்கனவே அரசியல் குறித்து அறம் பயின்று வருகிறார் கிருஷ்ணபிரியா என்று சொல்லப்பட்டது.

மாறும் கிருஷ்ணபிரியா
போயஸ் கார்டனிலேயே வளர்ந்த கிருஷ்ணபிரியா ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால் அவரைப் போலவே தோற்றத்திலும் மாறினார் இவர். அண்மையில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசிய விழிப்புணர்வு பேச்சு பலராலும் கவனிக்கப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணபிரியாவின் அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்தடுத்த அரசியல் பதிவுகள்
சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் அண்மைக்காலமாக தான் அரசியலுக்கு வரப் போவதாக சொல்லி வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிர் அம்பு விடும் வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தொடர்ந்து 4 நாட்களாக அரசியல் குறித்த பதிவுகளை தனது விருப்பங்களை வெளியிட்டு வருகிறார்.

அரசியல் என்பது என்ன?
ஜூன்30ஆம் தேதி வெளியிட்டுள்ள பதிவில் அரசியல் என்பது ஒருவரின் சக்தியை பொருத்ததல்ல என்று கூறியிருக்கிறார்."போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம்" என்ற கவிஞர் மருதகாசியின் கவிதையையும் தனக்கு சாதகமாக வெளியிட்டுள்ளார் கிருஷ்பிரியா.
வம்பை விடவேண்டியதில்லை
அளவிற்கு அதிகமான அமைதி நிறைந்திருக்கும் இடத்தில், அளவிற்கு அதிகமான வீரமும் நிறைந்திருக்கும் என்பதை சிலசமயம் வெளிக்காட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது என்று ஒரு பதிவை எச்சரிக்கையாக விட்டுள்ளார். வம்புக்கு போகவேண்டியதில்லைதான். ஆனால் வரும் வம்பையும் விடவேண்டியதில்லை, என்று கடைசியாக நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கிருஷ்ணபிரியா கூறியிருக்கிறார்.

எதிர்ப்பு அரசியல்
தொடர்ந்து தான் அரசியலுக்கு வர நேரிடும் என்பதை எச்சரிக்கும் தொணியில் கிருஷ்ணபிரியா வெளியிட்டு வருகிறார். இது ஜெயானந்த் திவாகரனுக்கு எதிராக விடப்படும் எச்சரிக்கையா என்று சந்தேகமும் வெளியாகியுள்ளது ஏற்கனவே ஜெயானந்த்திற்கும் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் வெளிப்படையான முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில் இளவரசியின் மூத்த வாரிசும் அரசியல் களம் காணும் தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார், தாங்குமா அதிமுக என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications