பென்டிரைவ்.. கட்டு கட்டாக பணம்.. பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து பறிமுதல்.. பரபரப்பு!
சென்னை: பிகில் படத்தின் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 65 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு ஆவணங்கள் இதில் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மத்திய கல்பாத்தி குடும்பத்தாருக்கு சொந்தமான ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இந்த வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.
பிகில் படத்தின் வசூல் 300 கோடியை தாண்டிய நிலையில், அது தொடர்பாக விசாரிப்பதற்காக இந்த வருமான வரித்துறை சோதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சென்னையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்தது. மொத்தம் 38 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அடுத்து என்ன
பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கடன் கொடுத்து உதவி இருந்தார். படத்திற்கு இவர் ஒரு பைனான்சியர். அதனால் இவரிடமும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். நேற்று இவரின் வீட்டிற்கு சென்று மதுரையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதேபோல் சென்னையில் இருக்கும் அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை செய்தனர். நேற்று மாலை தொடங்கிய சோதனை தற்போது வரை நடந்து வருகிறது.

விஜய்
நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரிடம் நேரில் சம்மன் அனுப்பினார்கள். அதோடு தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து விஜயின் பண்ணை வீட்டில் நேற்று இரவு முழுக்க சோதனை நடந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

அன்புச்செழியன் வீடு
இந்த நிலையில் அன்புச்செழியன் வீடு மட்டும் அலுவலகத்தில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அன்புச்செழியன் வீட்டில் இருந்து 65 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டு கட்டாக ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கணக்கில் வராத தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் சென்னையிலும், 15 கோடி ரூபாய் அவரின் மதுரை வீட்டிலும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணம் முரண்பாடு
மொத்தம் 7 பேக்கில் இப்படி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், பென்டிரைவ், இதில் கிடைத்துள்ளது. அங்கு இன்னும் விடாமல் சோதனை நடந்து வருகிறது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கைப்பற்றிய ஆவணங்கள், அன்புச்செழியன் வீட்டில் இருந்த ஆவணங்களை வைத்து ஒப்பிட்டு வருகிறார்கள். பிகில் வருமானம் குறித்து இதில் நிறைய முரண்பாடான தகவல்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

என்ன முரண்
பிகில் வசூல் எவ்வளவு, அதன் தொடர்பான எவ்வளவு வரி கட்டினார்கள் என்பது தொடர்பாக நிறைய முரண்பாடான தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பற்றி தற்போது வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. இதனால் சோதனை இப்போதைக்கு முடியாது. இன்று முழுக்க சோதனை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். படத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிய வேறு சிலரின் வீட்டிலும் சோதனை விரைவில் நடக்கும் என்கிறார்கள் .












Click it and Unblock the Notifications