ஜல்லிக்கட்டு: பொன். ராதாவுக்கு வாழ்த்துச் சொல்ல கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் "மல்லுக்கட்டு"!
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு முழு முதற்காரணமாக இருந்தது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட முயற்சி தான். இதற்கு காரணமாக இருந்த பொன். ராதாகிருஷ்ணனிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டிருப்பதாக அரசியல் கட்சித்தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியினை வழங்கிய மத்திய அரசுக்கும், இந்த அனுமதி கிடைக்க தொடக்கத்திலிருந்து நம்பிக்கையோடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே போல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசை நிர்பந்தித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி அரசால் 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் இருந்து அப்போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தடைகளும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகள் செய்வதுடன், போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வழங்கி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications