இலவச மிக்சியில புகை வருது… ஃபேன் சுத்தல… கிரைண்டர் ஓடலையே… ஸ்டாலினிடம் புகார் சொன்ன பெண்கள்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் பேசிய பெண்கள் பலரும், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் அனைத்து உபயோகிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், காட்சிப்பொருளாக மட்டுமே வைத்திருக்க வேண்டியிருப்பதாகவும் குறை கூறினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். ஏற்கனவே இரண்டு கட்ட பயணம் முடித்து 144 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். 3ம் கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று சேலத்தில் தொடங்கினார்.
கடந்த இரண்டு முறை மேற்கொண்ட சுற்றுப் பயணங்களை விட இம்முறை மக்களிடம் சற்று அதிகமாகவே நெருக்கம் காட்டினார் ஸ்டாலின். சங்கிரியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார். பின்னர் இடைப்பாடியில் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வீதிகளில் நடந்து சென்று
மாலை. ஜலகண்டாபுரம் வீதிகளில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் தெரிவித்த பல்வேறு பிரச்னைகளுக்கு பதில் அளித்து பேசினார் ஸ்டாலின், அப்போது அவர், 20 லட்சம் பேர் லாரி தொழிலை நம்பியுள்ளனர். போலீஸ், போக்குவரத்து அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களை லாரி ஓட்டுநர்கள் சந்திக்கின்றனர். லாரி தொழிலாளர்களின் நிலை குறித்த கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். லாரி தொழிலுக்கு என தனி மார்க்கெட் அமைக்கப்படும்,'' என்றார்

மிக்சி, கிரைண்டர் ஓடலையே
இடைப்பாடியில் பெண்கள் மத்தியில் பேசினார் ஸ்டாலின். அப்போது பெண்கள் பலரும் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியைக் கொண்டு வந்து காட்டினர். இது எதுவுமே ஓட மாட்டேங்குது... சுவிட்ச் போட்ட புகை வருது என்று குறை கூறினர்.

எல்லாமே ஊழல்
இந்த ஆட்சியில் கொடுக்கப்படுகிற இலவச பொருட்களில் தரமில்லை. இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் , முறைகேடு நடந்துள்ளது என்றார். தற்போது ஆடு மாடு கொடுப்பதிலோ, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்பதிலோ சரியான முறை பின்பற்றப்படுவதில்லை.

எங்க டிவி ஓடுச்சுல்ல
திமுக ஆட்சியில் இலவச டிவி வழங்கப்பட்ட போது, முறைப்படி அனைத்து தரப்பினருக்கும் இலவச டிவி கொடுத்தோம். 100 டிவியில் 2, 3 பழுதாகி இருக்கலாம். திமுக ஆட்சியில், முறைப்படி டெண்டர் விட்டு விலை முடிவு செய்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் சட்டமன்றத்தில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி, அதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய உறுப்பினர்கள் மேற்பார்வையில் முறையாக இலவச டிவிக்கள் வாங்கப்பட்டு, மக்களுக்கு தரமானதாக வழங்கப்பட்டது.

கட்டுப்படுத்த முடியலையே
விலைவாசி உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பருப்பு வழங்கினார். 10 மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ.50க்கு கொடுத்தார். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்க்கு விற்பனை வரியை ரத்து செய்தார்.

முதியோர் உதவித்தொகை
பஸ், மின்கட்டணம், பால் விலை உயர்வை குறைப்பேன் என்று கூறிய ஜெயலலிதா அதை எல்லாம் பல மடங்கு யர்த்தினார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். விரைவில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஸ்டாலின்.

நெசவு நெய்த ஸ்டாலின்
ஒவ்வொரு முறையும் தனது பயணத்தின் போது டிராக்டர் ஓட்டுவது, நூல் சுற்றுவது, சிற்பம் செதுக்குவது என அந்தந்த ஊருக்கு ஏற்ற வேலைகளை செய்து அசத்துவார் ஸ்டாலின். நேற்றைய தினம் சேலத்தில் நெசவாளர்களிடம் குறைகேட்ட ஸ்டாலின் தறியில் ஏறி உற்சாகமாக நெசவு நெய்தார்.

ரோட்டுக்கடை டீ, வடை
நடை பயணம் மேற்கொண்ட போது சாலையோரத்தில் இருந்த தேநீர் கடையில் டீ வாங்கி குடித்த ஸ்டாலின், வடை சாப்பிட்டுக்கொண்டே அங்கிருந்தவர்களிடம் குறை கேட்டார்.
செங்கல் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மேட்டூர், ஓமலூர் பகுதியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார் பின்னர் சேலத்தில் முக்கிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications